விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
சென்னையில் உள்ள பணக்கார தொழிலதிபரான சூர்யா ஏனோ 40 வயதை தாண்டியும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். நம்ம குடும்பத்துக்கு ஒரு வாரிசு வேண்டாமா? நீ திருமணம் செய்து, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரின் அம்மா ராதிகா நச்சரிக்கிறார். உடனே வெளிநாடு செல்லும் சூர்யா வாடகைதாய் முறையில் ஒரு பையனை உருவாக்கி, அந்த குழந்தையை இந்தியா அழைத்து வருகிறார். அப்போது அந்த குழந்தைக்கு மருத்துவ ரீதியிலான ஒரு பிரச்னை வர, அந்த வாடகை தாய் மூலமாக சிகிச்சை அளிக்க வேண்டிய சூழ்நிலை. மீண்டும் வெளிநாடு சென்று அந்த குழந்தையின் தாயான மமிதாபைஜூவை கண்டுபிடித்து தனது வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவரே ஒரு டாக்டர். சூழ்நிலை காரணமாக வாடகை தாய் ஆக மாறியிருக்கிறார். ஒரு கட்டத்தில் சூர்யா குணம், குடும்பம் பார்த்து அவரை மமிதா பைஜூ காதலிக்க, எனக்கு 42 உனக்கு 22 வயது நமக்குள் செட்டாகாது என்று சூர்யா எஸ்கேப் ஆக, கடைசியில் என்ன நடந்தது என்பது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் கதை.
இதுவரை சூர்யா நடிக்காத கதை, தமிழ் சினிமாவில் எந்த ஹீரோவும் தொடாத சப்ஜெக்ட். கொஞ்சம் பிசகினால் படம் தப்பாகிவிடும். ஆனால், அதை நாகரீகமாக, குடும்பம், குழந்தைகள் பார்க்கும்வகையில் அம்மா சென்டிமென்ட், அப்பா சென்ட்மென்ட், அண்ணன், தங்கை சென்டிமென்ட் கலந்து உணர்வுபூர்வமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லுாரி. இவர் தனுஷ் நடித்த வாத்தி, துல்கர் நடித்த லக்கிபாஸ்கர் படங்களின் இயக்குனர்.

40 வயதை கடந்த கேரக்டரில், அதேசமயம் ஸ்டைலாக, அழகாக நடித்து இருக்கிறார் சூர்யா. அவருக்கும், அம்மா ராதிகாவுக்குமான பாசம் பீல் பண்ண வைக்கிறது. அவருக்கும் மமிதாவுக்குமான சண்டை, சில சீன்கள் ரசிக்க வைக்கிறது. சூர்யா சம்பந்தப்பட்ட குழந்தை, ஆபீஸ் சீன்களும் கியூட். என்ன, அவர் ரசிகர்கள் விரும்பும் வகையில் மாஸ் சீன், கலர்புல் பாடல், பில்டப் இல்லை. கல்வி குறித்த, குடும்ப உறவுகள் குறித்த நல்ல டயலாக் அடிக்கடி வருகிறது. முதற்பாதியில் குழந்தை, அம்மா, மமிதா, நண்பன், ஆபீஸ் என நடிக்கும் சூர்யா, 2ம் பாதியில் சித்தி, அவர் மகள், திருமணம், அரசியல்வாதி, பிரச்னை என வேறு திசைக்கு செல்கிறார். அது கதையை வீக் ஆக்குகிறது. குழந்தை கதைக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை. அந்த போர்ஷனை குறைத்து, மமிதா, குழந்தை காட்சிகளை இன்னும் விறுவிறுப்பாக அமைத்து இருக்கலாம்
அமெரிக்கா வாழ் துறுதுறு பொண்ணு, டாக்டர், வாடகை தாய், சூர்யாவை காதலிப்பவர் என பல இடங்களில் பின்னி எடுத்து இருக்கிறார் மமிதா. அவரின் குறும்பு, துறுதுறுப்பு, அந்த ஸ்டைலான, நக்கலான வேகமாக பேசும் டயலாக்,காஸ்ட்யூம், கேரக்டர் என எல்லாமே படத்துக்கு பெரிய பிளஸ். அந்த கால ஜெனிலியா மாதிரி இருக்கிறார். ராதிகாவுக்கும் அவருக்குமான பாண்டிங், சூர்யாவுக்கும் அவருக்குமான பாசம் பெர்பக்ட். ஆனால், அம்மாவாக அவர் எந்த இடத்திலும் ஸ்கோர் பண்ணவி்லலை. அந்த விஷயத்தில் இன்னும் சில காட்சிகளை வைத்திருந்தால் படம் இன்னும் பேசப்பட்டு இருக்கும்
சுகர் பேஷன்ட் ஆக, சூர்யாவின் பாசக்கார அம்மாவாக மனதில் நிற்கிறார் ராதிகா. அவரின் சின்ன, சின்ன அப்பாவிதனம் கலந்த நடிப்பு, பாசம் நிறைவாக இருக்கிறது. சூர்யா சித்தியாக மாஜி ஹீரோயின் ரவீணாடன்டன், அவர் மகளாக பவானஸ்ரீ, அவர்களின் உறவினராக நாசர் வருகிறார்கள். அந்த இடங்கள், அந்த திருமண பின்னணி, அடுத்து நடக்கும் சீன்களில் சினிமாதனம் அதிகம். படத்தின் மைனஸ் இடைவேளைக்குபின் வரும் அந்த திருமணம் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான். அதேபோல் கிளைமாக்சிலும் தெளிவில்லை. இன்னும் அழுத்தமாக, மனதில் நிற்கும் சீனை வைத்து இருக்கலாம். சூர்யாவுக்கு பெண் ரசிகைகள், குடும்ப ரசிகர்கள். அவரின் வெளிநாடு டூர், அந்த காண்டம் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். அந்த இடங்களில் குடும்பத்துடன் பார்ப்பவர்கள் நெளிய வேண்டியது இருக்கும். சூர்யா இமேஜிக்கு அது செட்டாகவில்லை. அவரை துப்பாக்கிசுடும் வீரராக காண்பிக்கிறார்கள். அதை கதையில் பயன்படுத்தி இருக்கலாம்,. அதுவும் மிஸ்சிங். சூர்யா ரசிகர்கள் கை தட்டி ரசிக்கும் சீன்கள் குறைவு.
ஜி.வி.பிரகாஷ் இசை, பின்னணி ஓகே ரகம். இன்னும் சிறப்பாக கொடுத்து இருக்கலாம். நிமேஷ்
கேமரா வொர்க் படத்தை அழகாக, பிரமாண்டமாக காண்பித்துள்ளது. கொஞ்சம் மாறுபட்ட கதை என்றாலும், குடும்பத்துடன் பார்க்கும் அளவுக்கு டீசன்ட் ஆக எடுத்து இருக்கிறார் இயக்குனர். சூர்யா, ராதிகா, மமிதா நடிப்பு ஓகே. ஆனால், மற்றவர்களை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். காமெடி, பாடல் போன்ற கமர்ஷியல் விஷயங்களை இன்னும் கூடுதலாக இணைத்து இருந்தால் பெரிய கமர்ஷியல் படமாக வந்து இருக்கும். ஆனாலும், வித்தியாசமான முயற்சி, நல்ல கதை, பீல் குட் மூவி
மகுடம்
சூப்பர்குட்பிலிம்ஸ் தயாரிக்க, விஷால் நடித்து இயக்கியிருக்கும் படம் மகுடம். ஓ…சூப்பர் குட் பிலிம்ஸா? அப்ப, குடும்ப கதையாக இருக்கும் என்று நினைத்தால் தவறு. இது குடும்ப கதை ஆனால், வன்முறை, சண்டைக்காட்சிகள் நிறைந்த பழிவாங்கும் குடும்ப கதை.
அழகான மனைவி துஷாரா, 2 குழந்தைகள் என சென்னையில் நடுத்தர வாழ்க்கை வாழ்கிறார் மெடிக்கல் ரெப் ஆகும் இருக்கும் விஷால். கஷ்டப்பட்டு செகனன்ட் ஒரு கார் வாங்கி, அதில் குடும்பத்துடன் டூர் போகிறார். அப்போது வில்லன் கும்பல் அந்த கார் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது. அதில் விஷால் மனைவி, மகள் இறக்கிறார்கள். அந்த துப்பாக்கி சூடுக்கு பின்னணியில் வைசாக்கில் இருக்கும் விஷால் அப்பா( அவரும் விஷால்தான்) என்பது தெரிகிறது. அவர் மீதான கோபத்தில் மகன் விஷால் குடும்பத்தை வில்லன்கள் தாக்கியது புரிய வருகிறது. அப்பா மீது கோபப்படுகிறார் மகன் விஷால், தனது பேத்தி, மருமகளை கொன்றவர்களை அந்த தாதா விஷால் பழிவாங்கினாரா? அவருக்கும், மகனுக்கும் என்ன பிரச்னை? ஏன் பிரிந்தார்கள்? கடைசியில் குடும்பம் ஒன்று சே ர்ந்ததா? வில்லன்களுக்கு என்ன கதி ஏற்பட்டது. இவ்வளவு பிரச்னைக்கும் என்ன காரணம் என்பது மகுடம் படத்தின் கதை
மனைவி, குடும்பம், குழந்தைகள், நண்பன், மாமனார், ஒரு கார் கனவு, குடும்ப நிதிப்பிரச்னை என சராசரி வாழ்க்கை வாழ்கிறார் விஷால். அந்த கேரக்டரில் அப்படி ஒரு அமைதி, பொறுமை. பல நடுத்தர குடும்ப ஆண்களின் மனநிலையை பிரதிபலிக்கிறார். அவர் குடும்பத்துக்கு ஒரு பிரச்னை ஏற்பட, வைசாக்கில் இருக்கும் தாதா, எதிரிகளை கொன்று குவிக்கும் அப்பா விஷால் பிளாஷ்பேக் விரிவடைகிறது. தமிழ், தெலுங்கில் படம் ரிலீஸ் ஆவதால் சென்னையில் ஒரு கதை, வைசாக்கில் ஒரு கதை என இயக்குனர் விஷால் பிரித்து இருப்பது தெரிகிறது.

சென்னை கதை சைவம் என்றால், வைசாக் கதை, அந்த சீன்கள் அசைவம். மகன் விஷாலை விட, அப்பா விஷால், அவரின் சின்ன வயது தோற்றம் ரசிக்க வைக்கிறது. அந்த பிளாஷ்பேக்கில் வைசாக் துறைமுகம், அடியாள் விஷால், அவர் காதலிக்கும் அஞ்சலி, ஆடல், பாடல், வில்லன்களின் கொடூர புத்தி, இழப்பு என பல விஷயங்களை சொல்கிறார்கள். அந்த பிளாஷ்பேக் காட்சி படத்தை ரசிக்க வைக்கிறது. காதலியாக, மனைவியாக மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் ஆக் ஷன் காட்சியிலும் அஞ்சலி மிரட்டியிருக்கிறார். துறைமுகம், துரோகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் மனதை பிசைகிறது. கடைசியில் அப்பா விஷாலை கொல்ல நண்பர்கள் சூழ, மகன் அங்கே வர என்ன நடக்கிறது என் கோணத்தில் அரை மணி நேர ஆக் ஷன் கிளைமாக்ஸ் ஆரம்பிக்கிறது. அந்த கிளைமாக்ஸ், விஷால் சண்டைக்காட்சி, திலீப் சுப்புராயன் ஆக் ஷன் கொரியாகிராபி சண்டை பிரியர்களுக்கு பிடிக்கும். ஜி.வி.பிரகாஷ் இசையில் பின்னணி தெறிக்க வைக்கிறது. விஷால், அஞ்சலி குத்து பாட்டு ஆட்டம் போட வைக்கிறது. கொஞ்சம் சண்டைக்காட்சிகளை குறைத்து மற்ற கமர்ஷியல் விஷயங்களை சேர்த்து இருந்தால் படத்தை வெகுவாக ரசித்து இருக்கலாம்.
மகன், அப்பா, அவரின் இளம் வயது என 3 கெட்அப்பில் வருகிறார் விஷால். இளையராஜா பாடல் பாடிக்கொண்டு அப்பா கேரக்டர் சண்டைபோடுவதும், மக்களுக்காக அவரின் இளம் வயது கேரக்டர் பொங்குவதும், அதனால் இழப்பை சந்திப்பதும் நல்ல திரைக்கதை, வயதான கெட்அப்பிலும் விஷால் மிரட்டுகிறார். காதல், குடும்ப சென்டிமென்ட்டை தாண்டி படம் முழுக்க ஆக் ஷன் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, இடைவேளைக்குபின் சண்டை காட்சிகளே அதிகம். கிளைமாக்ஸ் சண்டை பெண்கள் புடை சூழ வித்தியாசமாக இருக்கிறது. அதற்கு முந்தைய அப்பா விஷால் சண்டைக்காட்சிகளும் விறுவிறுப்பாக இருக்கிறது. பைட் விரும்புகிறவர்களுக்கு படம் பிடிக்கும். சில சமயம் ரத்தம், சண்டை ஓவர் டோஸ் ஆகவிடுகிறது. மற்ற கமர்ஷியல் விஷயங்கள் குறைவு. முதற்பாதி இழுக்கிறது. பிற்பாதி முழுக்க ஆக் ஷன், பழிவாங்கல், சென்டிமென்ட். இயக்குனர் விஷால் இன்னும் கதை, திரைக்கதையில் வொர்க் பண்ணியிருக்கலாம். எது எப்படியோ சீன போலி உதிரி பாகங்களால் ஏற்படும ஆபத்து, விபத்தை சொன்ன மகுடம் படத்தின் சமூக அக்கறையை பாராட்டலாம்.
மீனாட்சிசுந்தரம், சிறப்பு செய்தியாளர்.




