நகைச்சுவை நடிகர் சதிஷ் நடித்து வரும் ‘வித்தைக்காரன்’ படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சதீஷ். இவர் கடந்த ஆண்டு ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ’வித்தைக்காரன்’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடந்த ஜனவரி 18ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தை அருள்நிதி நடித்த தேஜாவு படத்தை தயாரித்த ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கியுள்ள இப்படத்தில் சதீஷுடன் சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், சுப்ரமணியம் சிவா, மதுசூதன், ஜான் விஜய், ஜப்பான் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விபிஆர் இசையமைக்க , ஒளிப்பதிவு பணியை யுவ கார்த்திக்கும், படத்தொகுப்பு வேலைகளை அருள் இ சித்தார்த்தும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய உதவி இயக்குநர்களில் ஒருவராக இருந்த வெங்கிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் எனவும் .
அவரது முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற நான் வாழ்த்துவதோடு, சதிஷ் மற்றும் ஒட்டுமொத்த படக் குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார். ‘வித்தைக்காரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன்
போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/Dir_Lokesh/status/1651459474543222785?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








