தமிழ்நாட்டில் வரும் 10ம் தேதி வரை அநேக இடங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இன்று காலை, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது 8ம் தேதி புயலாக மேலும் வலுப்பெறக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “வரும் 8, 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.







