பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்றும், அந்த அமைப்பு பல்வேறு முகமூடிகளை அணிந்துகொண்டு இயங்கி வருவதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய THE LURKING HYDRA புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டுப் பேசினார். அப்போது, தீவிரவாதத்திற்கு எதிரான வாதத்தை முன் வைக்கும் இந்த புத்தகம் ஒரு முக்கியமான ஆவணம் என அவர் குறிப்பிட்டார். தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதில் இந்திய ராணுவம் அதிக திறன் கொண்டிருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
1990ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவில் தான் சேர்ந்தபோது, தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படுவதே தனது தினசரி வழக்கமாக இருந்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
2014ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, ராணுவத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறிய ஆளுநர் ஆர்.என். ரவி, இதையடுத்தே தீவிரவாதிகளுக்கு எதிராக சமரசமற்ற அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டதாகக் கூறினார். அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டும் அனைவருமே தீவிரவாதிகள்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக அமைதியான சூழலை நாடு பார்த்து வருவதாக தெரிவித்த ஆளுநர் ஆர்.என். ரவி, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் முன்பு தீவிரவாதம் மட்டுமே ஓங்கி இருந்ததாகவும், ஆனால் தற்போது அதுபோன்ற சூழ்நிலை அங்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்று தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அந்த அமைப்பு பல்வேறு முகமூடிகளை அணிந்துகொண்டு இயங்கி வருவதாகத் தெரிவித்தார். மேலும், அந்த அமைப்பு, பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக செயல்பட்டு வருவதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்டார்.





