தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கை ஜூன் 21ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். எனினும், கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களைத் தவிர மற்ற 27 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
தேநீர் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கவும், பார்சல் முறையில் மட்டும் தேநீர் வழங்கவும் அனுமதிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் பாத்திரங்களை கொண்டு வந்து டீ வாங்கிச் செல்ல வேண்டுமெனவும், நெகிழி பைகளில் தேநீர் பெறுவதை தவிர்க்க வேண்டுமெனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.







