தமிழ்நாட்டில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே, தமிழை வாசித்து புரிந்து கொள்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் அறக்கட்டளை கற்றல் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், தமிழ்நாட்டில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே தமிழில் படிப்பதை புரிந்து கொள்ள முடிவதாக தெரிய வந்துள்ளது. தெலுங்கில் 45%, மலையாளம் 44%, கன்னடம் 44 சதவீகமாகவும் உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் 23 சதவீதம் மாணவர்கள் மட்டுமே, எண்களை கண்டறிதல், படித்தல், கூட்டல், கழித்தல் மற்றும் பெரிய எண்கள், நாள், தேதி மற்றும் மாதத்தை நாட்காட்டியில் கண்டறிதல் போன்ற குறைந்தபட்ச திறன்களை பெற்றுள்ளனர். பிற தென்மாநிலங்களில் உள்ள மாணவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்று உள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா கால கட்டத்தில், தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதும், கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஏற்பட்ட குறைபாடுகளும் தான், மாணவர்களின் இந்த மோசமான செயல்திறனுக்கு முக்கிய காரணங்களாக உள்ளது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மாணவர்கள் எழுத்துக்களையும், வார்த்தைகளையும் படிப்பதற்கு சிரமப்படுவதே முதன்மைப் பிரச்னையாக உள்ளது என்றும், தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டம், இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் 29% தமிழ்நாட்டு மாணவர்களால், ஒரு நிமிடத்தில் 35 வார்த்தைகளுக்கு மேல் வாசிக்க முடியும். ஆனால் அடிப்படை அறிவு மற்றும் திறமை குறைபாடு காரணமாக, 43% மாணவர்களால், ஒரு நிமிடத்தில் 14 வார்த்தைகள் வரை மட்டுமே வாசிக்க முடிகிறது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
இதற்கு தீர்வு காண, தமிழ்நாடு அரசு, தொடக்கப் பள்ளிகளில், எழுதும் முன் வாசிப்பு என்ற முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். வாசிப்பு என்பது மாணர்களுக்குத் தெரிந்த வார்த்தைகளுடன் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அது குழந்தைகளின் புரிந்துகொள்ளுதல் மற்றும் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் என்று UNICEFன் முன்னாள் கல்வி நிபுணர் அருணா ரத்தினம் கருத்து தெரிவித்துள்ளார்.







