தமிழகத்தில் கடந்த 4 வருடங்களில் சாலை விபத்தினால் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ளது.
மற்ற நாடுகளை விட அதிகமாக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சாலை விபத்துக்களில் 415 பேர் வரை உயிரிழக்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் நெடுஞ்சாலை ரோந்து குழுக்கள் மற்றும் சிறப்பான ஆம்புலன்ஸ் சேவையால் கடந்த 4 வருடங்களில் 54 சதவிகிதம் வரை சாலை விபத்தால் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ளன. 2016ஆம் ஆண்டு சாலை விபத்துக்களில் சிக்கி 17,218 பேர் உயிரிழந்தனர். அதே சமயம் 2020ஆம் ஆண்டு சாலை விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7,287 ஆக உள்ளது.
சாலை விபத்தைக் குறைக்க தமிழக மாதிரியினை பின்பற்றி மகாராஷ்டிரா நேற்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா ஆகியவை விரைவில் செயல்படுத்தவுள்ளன.

ஆனாலும் சாலை விபத்துக்கள் மற்றும் மரணம் தொடர்பான தற்போதைய புள்ளி விவரங்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாகனங்கள் வெளியே வர முடியாத அளவுக்கு கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. அதே சமயம் 2016ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் சாலை விபத்து மரண விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் விபத்து நடந்த இடத்திற்கு 13 நிமிடங்களுக்கு குறைவாகவே ஆம்புலன்ஸ் சென்றுவிடும். விபத்து நடைபெற சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளில் ஆம்புலன்ஸுகள் சுற்றி வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டதால், விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரும் நேரம் வெகுவாக குறைகிறது.
சமீபத்தில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது, “2030 ஆண்டு ஆண்டு சாலை விபத்துக்கள் மூலம் 6-7 லட்சம் பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளது. ஆகவே, விபத்துக்களைக் குறைக்க தமிழகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் போல மற்ற மாநிலங்களிலும் மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.







