மின் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசை எதற்காக குறை சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் தடைபட்டது எனவும், மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிலக்கரியும் குறைவாகவே கிடைத்ததாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கினார்.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் தடை உள்ளது. இதனால் 2006 ஆண்டு நடந்த திமுக ஆட்சி போல் தற்போது உள்ளது. ஆனால், மின் துறை அமைச்சரும், முதல்வரும் கைகாட்டுவது மத்திய அரசைத் தான்” என்று குறிப்பிட்டார்.
செயற்கையான மின்சார தட்டுபாட்டை உருவாக்கி ,தனியாரிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்க முயல்கிறார்கள் என்ற அண்ணாமலை, “அமைச்சர்கள் பணம் சம்பாதிக்க செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கிறார்கள். ஆனால் மத்திய அரசை எதற்காக குறை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், போதிய அளவில் நிலக்கிரி கையிருப்பு உள்ளது. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற மின்வெட்டு கிடையாது. பிரதமருக்கு கடிதம் எழுதுவதே முதலமைச்சரின் வேலையாக உள்ளது. எதற்கு எடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர் என்றும் அண்ணாமலை விமர்சித்தார்.







