சிவாஜி கணேசன் 97-வது பிறந்தநாள் | சிவாஜி புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் #MKStalin

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் புகைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1928ம் ஆண்டு அக்.1ம் தேதி பிறந்தார். குழந்தைப் பருவம் முதல்…

tamilnadu, mkstalin,cmotamilnadu, Shivaji Ganesan

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் புகைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1928ம் ஆண்டு அக்.1ம் தேதி பிறந்தார். குழந்தைப் பருவம் முதல் நடிப்பதில் ஆர்வம் கொண்டு பல்வேறு நாடகங்களில் பங்கேற்று நடித்து வந்தார். பேரறிஞர் அண்ணாவால் எழுதப்பட்ட “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” என்ற நாடகத்தில் சிவாஜியாக நடித்தார். அவரின் நடிப்புத் திறமையினை பாராட்டி தந்தை பெரியார் “சிவாஜி கணேசன்” என்று பெயர் சூட்டினார்.

சிவாஜி கணேசன் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவாகிய ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் திரைப்பட உலகில் 300 மேற்பட்ட திரைப்படங்கள், 2 இந்தி படங்கள். 9 தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசன் “நடிகர் திலகம்”, “நடிப்புச் சக்கரவர்த்தி” என்றும் மக்களாலும், திரை உலகத்தினராலும் அழைக்கப்பட்டார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, செவாலியே விருது மற்றும் தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள் : உதகை மற்றும் கொடைக்கானலில் #EPass நடைமுறை நீட்டிப்பு!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அடையாறில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சாமிநாதன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரின் புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவாஜி கணேசன் குடும்பத்தினருடன் இணைந்து பார்வையிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.