பிரபல சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான், தனக்கு வழங்கப்பட்ட கேப்டன் பொறுப்பை மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான். ஐபிஎல் தொடரில், ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். திறமையான பேட்ஸ்மேன்களை கூட சுழலால் மிரட்டும் ரஷித் கானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட கேப்டன் பதவியை அன்பாக மறுத்திருக்கிறார் ரஷித் கான்.
ஏன் இப்படி?
‘ஏன்னா, நான் விளையாட்டு வீரனா மனசளவுல வலிமையா இருக்கேன். கேப்டன் பொறுப்புக்கு நான் சரிபட்டு வரமாட்டேன்னு நினைக்கிறேன். ஆனா, துணை கேப்டனா தேவையான நேரத்துல கேப்டனுக்கு ஆலோசனை வழங்கியிருக்கேன். இப்ப இந்த நிலைமையில் இருந்து விலகி இருக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். ஒரு பந்துவீச்சாளரா அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்னு நினைக்கிறேன். அணியோட கேப்டனா நான் யோசிக்கிறதை விட, என் செயல்பாடு அணிக்கு முக்கியம். அதைவிட என்னன்னா, டி20 உலகக் கோப்பை போட்டி விரைவில் தொடங்க இருக்கு. இந்த நேரத்துல கேப்டன் பொறுப்பு என் செயல்திறனை பாதிக்கும்னு நினைக்கிறேன். அதனால் ஒரு வீரரா அணியில இருக்கிறதைத்தான் விரும்பறேன். கேப்டன் பொறுப்பு என் செயல் திறனை பாதிக்குமோன்னு பயமா இருக்கு’ என்கிறார் ரஷித்கான்.
ஆப்கானிஸ்தான் அணி கடந்த மூன்று வருடங்களாக சரியான கேப்டனை தேடிக் கொண்டிருக்கிறது. யாரும் செட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷித் கான் இப்போது அபுதாபியில் இருக்கிறார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில், லாகூர் அணிக்காக ஆடி வருகிறார்.
………







