முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து மாவட்டத்திற்கு ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தைக் கருணாநிதி நினைவிடத்தில் மரக்கன்று நட்டு வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கிவைத்தார். இதையடுத்து தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திலும் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திலும் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து கோபாலபுரம் இல்லம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இல்லத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார்.
ஏழை எளியோருக்குத் தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், கல்வி உதவித் தொகை, திருநங்கைகளுக்கு உதவித் தொகை, மாணவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிலையில் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அவரது தாயார் ராசாத்தி அம்மாளும் மரியாதை செலுத்தினார். இதேபோல் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.







