தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ததது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நேற்றிரவு 8 மணியளவில் தொடங்கிய கனமழை மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதன் காரணமாக ஒசூர் – பாகலூர் சாலை, தாலுகா அலுவலகம் பேருந்து நிலையம் செல்லும் முக்கிய சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. மணப்பாறை பேருந்து நிலையம் பகுதியில் தேங்கிய நீரினால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர், திருவையாறு, கல்லணை மாரியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கோடை வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக, ஊர்க்காடு பகுதியில் மின் கம்பங்கள் ஆற்றுப் பகுதி செல்லும் சாலையில் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதேபோல, பல மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.







