முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

தமிழ்நாட்டில் 70% பள்ளிகளில் இணைய வசதி இல்லை! – புள்ளிவிவர ரிப்போர்ட்.


சி.பிரபாகரன்

இந்திய பள்ளி கல்விமுறையானது, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், 97 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 26.5 கோடி மாணவர்கள் கொண்ட , உலகின் மிகப்பெரிய கல்வி முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த 15 லட்சம் பள்ளிகளில், தமிழ்நாட்டில் 58,897 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. 2019-20 கல்வியாண்டில் “இந்த பள்ளிகளின் நிலை என்ன?” என்பது குறித்த அறிக்கை ஒன்றினை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் 2019-2020 கல்வியாண்டின், கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு அறிக்கையை (யுடிஎஸ்இ +) சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளின் நிலை என்ன என்பதனை பற்றிய விரிவான தகவல்கள், புள்ளி விவரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2019-20 கல்வியாண்டை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் மொத்தம் 58,897 பள்ளிகள் உள்ளன. இதில் 37,579 அரசு பள்ளிகள், 8,328 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,382 தனியார் பள்ளிகள் மற்றும் 608 இதர பள்ளிகள். இந்த மொத்த பள்ளிகளிலும் கிட்டத்தட்ட 5,62,762 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

தமிழ்நாட்டில், நூற்றுக்கு நூறு சதவீதம் அனைத்துப் பள்ளிகளிலும் மின் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது என இந்த அறிக்கை கூறுகிறது. மேலும் குடிநீர் வசதி, கைகழுவும் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளில் 100 சதவீதம் தமிழ்நாட்டின் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் உள்ளன என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவில் இதுபோன்று, நூற்றுக்கு நூறு சதவீதம் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட பள்ளிகள் பெற்ற சில மாநிலங்களில், தமிழ்நாடும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், சிலவற்றில் தமிழ்நாடு பள்ளிகள் 100 சதவீதத்தை எட்டாத நிலையே உள்ளது. மருத்துவ பரிசோதனையில் நூற்றுக்கு 95.3 சதவீதம் மட்டுமே எட்டியுள்ளது. அதிலும், அரசு பள்ளிகளில் 97.34 சதவீதம் மற்றும் தனியார் பள்ளிகளில் 89.04 சதவீத பள்ளிகளில் மட்டுமே மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

மேலும், தமிழ்நாட்டில் 78.06 சதவீத பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதிலும் அரசு பள்ளிகளில் 80.82 சதவீத பள்ளிகளிலும், அதனைக் காட்டிலும் அதிகமாக தனியார் பள்ளிகளில் 90.47 சதவீத பள்ளிகளிலும் கணினி வசதி உள்ளது. இணைய வசதியை பொறுத்தவரையில், 2019-20 கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 31.95 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி உள்ளது என இந்த அறிக்கை கூறுகிறது. அதிலும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக, 17.95 சதவீத அரசுப் பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி உள்ளது எனவும், தனியார் பள்ளிகளில் 75.44 சதவீத பள்ளிகள் இணைய வசதியை கொண்டுள்ளன எனவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

ஆக எஞ்சியிருக்கும் 70% தமிழ்நாடு பள்ளிகளில் 2020 வரை இணைய வசதி இல்லை என குறிப்பிட்டாலும், 2020ல் அதிகரித்த கொரோனாவின் தாக்கத்தினால், ஊரடங்கில் பள்ளிகள் மூடப்பட்டு இணைய வழி கல்வியே இன்று வரையிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே, இன்று இணைய வசதி என்பது 100 சதவீதம் அனைத்து மாணவருக்கும் அடிப்படை தேவையாக இருக்கிறது.

ராசிபுரம் அருகே செல்போன் சிக்னல் கிடைக்காததால், மாணவர்கள் ஆபத்தை உணராமல், ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் அவலம் அரங்கேறி வருகிறது. “நான் எனது தாயின் ஸ்மார்ட்போன் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் படிக்கிறேன். அவர் வேலைக்குச் சென்றுவிட்டால் எங்களுக்கு ஸ்மார்ட்போன் கிடைக்காது. நானும் எனது சகோதரியும், நண்பர்கள் மூலம் பாடத்தைப் பற்றி கேட்டு அறிந்து கொள்கிறோம். எங்களுக்கு ஒரு ஸ்மார்ட்போன் வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்” என்று ஊடகத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தார் மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர்.

50 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த தமிழ்நாடு அரசியல் கட்சிகள், பள்ளி மாணவர்களின் நலன் கருதி மதிய உணவு திட்டம், இலவச பஸ் பாஸ், சைக்கிள், லேப்டாப் போன்ற பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து உள்ளது. இன்று மாணவர்கள் கல்வி கற்க, இணைய வசதி என்பது அடிப்படைத் தேவையாக அமைந்துள்ளதால் அதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அதற்கேற்றார்போல், மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்குதல், கிராமப்புறங்களில் இணைய வசதி கிடைக்கும் வகையில் செல்போன் கோபுரங்கள் அமைத்தல், இலவச டேட்டா வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும், கணினி மற்றும் இணைய வசதி இல்லாத பள்ளிகளில் கூடிய விரைவில் அனைத்து வசதிகளையும் கொண்டு வந்து, மாறி வரும் இணைய உலகில் பள்ளி மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியது அரசின் தலையாய கடமையாகிறது என்பதே பலரது கருத்தாகவும் இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம்!

Halley Karthik

6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதி; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

G SaravanaKumar

கட்டடம் இடிந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி!

Niruban Chakkaaravarthi