ஆறுமுகசாமி ஆணையம், உண்மை கண்டறியும் ஆணையம் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் முன்பு, விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்குகோரிய அப்போலோ மருத்துவமனையின் மனு 3வது நாளாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிறிய விஷயங்களை கூட, கவனமாக கையாள ஆணையத்திற்கு அறிவுரை வழங்கிய நிலையில், அதனை கடைபிடிக்க ஆணையத்திற்கு சிறிது கால அவகாசம் வழங்கினால் என்ன என, அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு நீதிபதிகள், கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணையம் ஒரு தலைபட்சத்துடன் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை, எதனடிப்படையில் வைக்கிறார்கள் எனவும், எந்த அடிப்படையில் இயற்கை நீதி மீறப்பட்டுள்ளதாக கூறுகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர். வழக்கு தொடர்பாக வாதிட்ட தமிழ்நாடு அரசு தரப்பு, ஆறுமுகசாமி ஆணையம் உண்மை கண்டறியும் ஆணையமே தவிர, விசாரணை ஆணையம் இல்லை என தெரிவித்தது. இதையடுத்து, இதுவரை முன் வைத்த வாதங்கள், முன் வைக்கவுள்ள வாதங்கள் குறித்து எழுத்துப்பூர்வமான அறிக்கையை தாக்கல் செய்ய அப்போலோ நிர்வாகத்துக்கு, உத்தரவு பிறப்பித்தனர். மேலும், மனு மீதான விசாரணையை நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.







