இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 34 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 5 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். அதற்கு முன்பும் மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட அனைத்து படகுகளும் நேற்று விடுவிக்கப்பட்டதாகவும் இன்று சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டதாகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் மீனவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வர வெளியுறவு அமைச்சகம் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் துணைநிலை ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.







