தேர்தலுக்காக பொய் சொல்பவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நாளை மாலை 7 மணிக்கு நிறைவுபெற உள்ள நிலையில், அதிமுக, திமுக என அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது ஸ்டாலின், கஜா புயலின் போது எந்த உதவியையும் வழங்காத அமைச்சர் ஒ.எஸ்.மணியன் என்று குற்றம்சாட்டியதோடு, கஜா புயலின் போது பொதுமக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்கும் வாபஸ் பெறப்படும், வழக்கு போட்டவர் மீது வழக்கு பாயும் எனக் குறிப்பிட்டார்.
எனது மகள் வீடு, செந்தில் பாலாஜி, மோகன் வீடு உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. சோதனை மூலம் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்புதான் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட ஸ்டாலின், திமுக பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்றார்.
நாகையில் பசுமை துறைமுகம் அமைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். பழனிசாமி இதுவரை திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியதோடு, மீனவர்களை, மக்களை ஏமாற்றுபவர்களை மக்கள் 6ம் தேதி ஏமாற்றுவார்கள் என்றும், தேர்தலுக்காக பொய் சொல்பவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் எனவும் கூறினார் ஸ்டாலின்.
மேலும், விவசாயிகளை எனக்கு பிடிக்கும், போலி விவசாயிகளைத் தான் பிடிக்காது. பச்சை துண்டு போட்டால் விவசாயியா? விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்தவர் விவசாயியா என்று கேள்வி எழுப்பிய அவர், நாகையில் மீன் பதப்படுத்தும் தளம், கடல் உணவு பூங்கா அமைக்கப்படும். கீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என்ற வாக்குறுதியையும் அளித்தார்.







