1.41 லட்சம் பேருக்கு கிடைக்காத 2-ம் தவணை கோவேக்சின் தடுப்பூசி!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகக் கடந்த ஆறு வாரத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 319 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்தமுடியவில்லை எனத் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறையின் கொரோனா…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகக் கடந்த ஆறு வாரத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 319 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்தமுடியவில்லை எனத் தெரியவந்துள்ளது.

மாநில சுகாதாரத் துறையின் கொரோனா தடுப்பூசி தரவுகள் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்அஆர்) அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியை நான்கு முதல் ஆறு வாரக் காலத்திற்குள் செலுத்திக்கொள்ளவேண்டும்.

ஆனால் மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்கவேண்டிய கொரோனா தடுப்பூசி காலதாமதமாக வந்தடைந்தது. இதன்காரணமாக கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியைக் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தமுடியாமல் போனது.

தமிழ்நாட்டில் தற்போதுவரை 16.82 லட்சம் கோவேக்சின் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் 11.55 லட்சம் முதல் தவணை தடுப்பூசிகளாகும் 5.05 லட்சம் டோஸ்கள் இரண்டாம் தவணை தடுப்பூசிள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாநில சுகாதாரத் துறையின் தடுப்பூசி தரவுகளைக் கடந்த மே 2-ம் தேதி முதல் ஜூன் 13-ம் தேதி வரை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் படி கோவேக்சின் தடுப்பூசியின் முதல் தவணை மே 2-ம் தேதி 6,46, 408 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஜூன் 13-ம் தேதி செலுத்தப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி எண்ணிக்கை என்பது 5,05,089 பேருக்கு மட்டும் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் 1 லட்சத்து 41 ஆயிரத்து 319 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியின் 2-ம் தவணை செலுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கோவேக்சின் தடுப்பூசியின் 2-ம் தவணை செலுத்தமுடியாமல் போனது குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய பொது சுகாதார மையத்தின் தொற்றுநோய் துறைத் தலைவர் ஆர். பாபு கூறுகையில், கோவேக்சின் தடுப்பூசி எவ்வளவு பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த முறையான ஆவணங்கள் இல்லை. அதேபோல் ஒருவருக்கு கோவேக்சின் தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தி ஆறு வார காலத்திற்குள் இரண்டாம் தவணை செலுத்தமுடியாமல் போனாலும் பிரச்சினையில்லை. ஆனால் மேலும் காலதாமதம் செய்யாமல் விரைவாக 2-ம் தவணை தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளவேண்டும்” என அவர் கூறினார்.

கோவேக்சின் தடுப்பூசியின் 2-ம் தவணை ஒரு லட்சம் பேருக்கு மேல் செலுத்தமுடியாமல் போனதற்கு முக்கிய காரணம் மத்திய தொகுப்பிலிருந்து நமக்கு தடுப்பூசி சரியான நேரத்தில் வரவில்லை என்பதுதான். அதேபோல் முதல் தவனை தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒரு தரப்பு மக்கள் 2-ம் தவணை செலுத்திக்கொள்ள முன்வரவில்லை. மற்றொரு பிரிவினர் தடுப்பூசி இல்லாத காரணத்தால் விடுபட்டனர். கிராமங்கள் மற்றும் மாநகராட்சி மூலம் யாருக்கெல்லாம் கோவேக்சின் தடுப்பூசியின் 2-ம் தவணை விடுபட்டது என்பது குறித்து அடையாளம் காணப்பட்டுவருவதாக ” என மாநில சுகாதாரத் செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.