“நோய்த் தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு உங்களைக் காண நேரில் வருவேன்” என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மே 7ஆம் தேதி பதவியேற்று ஒரு மாதங்களை கடந்துள்ளார். இக்கட்டான சூழலில் பதவியேற்ற மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
அரசு ரீதியிலான அலுவலுக்காக வருவதால் தனக்கு கட்சியினர் யாரும் வரவேற்பு தெரிவிக்க வேண்டாம் எனவும், வரவேற்பு பதாகைகள் எதுவும் வைக்க வேண்டாம் எனவும் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார். கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் திருச்சி – தஞ்சை மாவட்டங்களில் காவிரிப் பாசனப் பகுதிகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிடவும், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையினைத் திறந்து வைக்கவும் முதலமைச்சர் இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறார்.
இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து மக்களுக்குமான இந்த அரசு தனது பணிகளை ஓய்வின்றி மேற்கொண்டு வருகிறது, காலமறிந்து கூவுகின்ற சேவலாக ஒவ்வொரு செயல்பாடும் தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “கடமை’யை நான் நிறைவேற்ற வேண்டியிருப்பதால் – ‘கண்ணிய’மிக்க செயல்பாடு என்பது நீங்கள் ‘கட்டுப்பாடு’ காப்பதுதான். பேரிடர் காலத்தினால் நாம் கட்டுண்டு இருக்கிறோம். பொறுத்திருப்போம். காலம் விரைவில் மாறும். நோய்த் தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன்” என்று மடலில் கூறியுள்ளார்.