”தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஜே.இ.இ தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் குறிப்பிடுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜே.இ.இ…

ஜே.இ.இ தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் குறிப்பிடுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு மதிப்பெண் வழங்கப்படாததால் அந்த மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாததால் அவர்களின் உயர்கல்வி வாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறியுள்ள அவர், ஜே.இ.இ தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை சில தளர்வுகளை அளித்தால் மட்டுமே, இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் என கூறியுள்ளார்.

எனவே, தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கான இடங்களில் தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்கள் குறிப்பிடுவதற்காக ஏதேனும் குறியீட்டை தேசிய தேர்வு முகமை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், இது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.