சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயம் இருக்கும்.தமிழை தமிழிசை நசுக்குகின்றார் என்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என தமிழிசை செளந்தரராஜன் பேசியுள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது, இந்த
விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும்
சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் பிரமாண்ட கேக்கை துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி இருவரும் இணைந்து வெட்டி அதனை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் புதிய ஆண்டு கொரோனா இல்லாத ஆண்டாக இருக்க வேண்டும். வரும் புதன்கிழமையில் இருந்து புதிய வகை கொரோனாவை கண்டறியும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது என்றார்.
கூட்டமாக இருக்கும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும் எல்லாவகையிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அவர், இருப்பினும் எதையும் எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயாராக உள்ளது என்றார்.
மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் மிக கவனமாக முககவசம் அணிய வேண்டும்
என்றும் கொண்டாட்டங்களில் எந்தவித கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை என தெரிவித்த
தமிழிசை செளந்தரராஜன், ஏழை மாணவர்களும் பயனளிக்கும் வகையில் தான் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமையப்போகின்றது இதில் எழும் வதந்திகளுக்கு இடமில்லை என்றார்.
மாநில அந்தஸ்து விவகாரம் எனக்கு நன்றாக தெரியும், மாநிலத்திற்கான அனைத்து
திட்டங்களும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் கிடைக்கும் என கருத்து
தெரிவித்த தமிழிசை செளந்தரராஜன், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயம்
இருக்கும். தமிழை தமிழிசை நசுக்குகின்றார் என்பதை நான் வன்மையாக
கண்டிக்கின்றேன். இந்த விவகாரத்தை அரசியாலாக்க வேண்டாம் என்றார்.
புதுச்சேரிக்கு ரூ.1400 கோடி மத்திய அரசு உதவி அளிக்கவுள்ளது, பொங்கல்
பொருட்கள் இலவசாமக வழங்கும் கோப்பிற்கு ஒப்புதல் வழங்கியிருகின்றேன்,
வேறுமாடல் ஆட்சி புதுச்சேரிக்கு தேவையில்லை என்றார்.
மேலும் இப்போது மாநில அந்தஸ்த்து விவகாரம் குறித்து பேசுவோர் பாராளுமன்றத்தில்
இருந்தவர்கள் ஏன் மாநில அந்தஸ்த்து கிடைக்க வழிவகை செய்யவில்லை என தமிழிசை
கேள்வியெழுப்பினார்.







