தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது,
“இலங்கை தெற்கில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி காரணமாக வடக்குப் பகுதியில் இருந்து காற்று தெற்குப் பகுதி நோக்கி ஈர்க்கப்படுவதால், தமிழ்நாடு ஊடாக காற்று பயணிக்கிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் கடும் குளிர்காற்று வீசிவருவதால், இரவு நேரங்களில் கடும் குளிர் இருக்கும். கடல் பரப்பில் நீராவிக் காற்றைவிட குளிர் அதிகம் நீடித்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது.
இடையிடையே மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. வெயில் வரும் போது குளிர் காற்று மாறி மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் 17, 18 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மீண்டும் குளிர் காற்று வீசத் தொடங்கும்.
அதுவரையில் இலங்கை காற்று சுழற்சியானது, குளிர் காற்றை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ள சுழற்சியின் காரணமாகவும் குளிர் காற்று வீசும். அத்துடன் 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை குளிரை ஈர்க்கும் சுழற்சியும் தென் அரைக்கோளத்தில் உருவாகும் என்பதால் அப்போதும் குளிர் காற்று கடுமையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.”
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







