தமிழக சட்டப்பேரவையில் அடுத்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மைய அரங்கத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சி-2022ஐ நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் நிதி முன்னேற்றம் அடைந்துள்ளது. நிதித்துறையில் இதுவரை 5 ஆயிரம் கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளேன். அரசுத்துறையிலிருந்து நிதித்துறைக்கு நிதி கோரி கோப்பு அனுப்பும் முன் துறை சார்ந்த அதிகாரிகள், தலைமை செயலாளர் மற்றும் துறையின் அமைச்சர் கையெழுத்திட்ட பின்னே நிதித்துறைக்கு அனுப்பபடும் என்றார்.
விரிவான ஆய்வு நடத்தினாலும் நான் ஆராய்ந்து ஆய்வு செய்த பின் சம்பந்தப்பட்ட கோப்புக்கு ஒப்புதல் அளிப்பேன். நிதித்துறையில் செயல்பட ஊக்கமும், ஆதரவும் முதலமைச்சர் மட்டுமே வழங்குகிறார். முதல்வர் ஆதரவு இல்லையென்றால் நிதியமைச்சராக செயல்பட முடியாது.
சமூக நீதி, பொருளாதார கொள்கையின் அடிப்படையில் நிதியை பெருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் நிதியுதவியை உயர்த்தாமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரானது. நிதி நிலைமை சரியான பின் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் நிதியுதவி உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு உண்மையான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதை இலக்காக வைத்து இருக்கிறது. அதிமுக ஆட்சியில் தவறான முறையில் 15 ஆயிரம் கோடி அளவிற்கு நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடியில் பல தவறுகள் நடந்துள்ளது என குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியில் தவறுகள் கலையப்பட்டு நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அரசு கலைக் கல்லூரியின் அடங்கலை காட்டி பயிர்க் கடன் பெற்றுள்ளனர். 5 ஏக்கர் வைத்துள்ள விவசாயி 1000 ஏக்கர் நெல்லை வழங்கியதாக நெல் கொள்முதல் நிலையத்தில் பணம் பெற்றுள்ளார். நகையே இல்லாமல் காலி கவரை வைத்து நகைக் கடன்கள் வாங்கி உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் அடுத்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும். பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கு குடும்பத்தின் உண்மைத் தன்மையை விசாரித்து கொண்டு இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகள் சரி செய்யப்பட்ட பின்னர் மக்கள் கேட்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். எல்லோருக்கும் எல்லாம் எனும் தத்துவத்தில் திமுக ஆட்சி செயல்படுகிறது என கூறினார்.







