அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு விரைவில் முதல் மாநிலமாக உருவெடுக்க உள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் நாட்டிலேயே முதல்முறையாக தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில், ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைய உள்ள சர்வதேச ஃபர்னிச்சர் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மரச்சாமான்கள் தயாரிக்கும் இந்த பூங்காவில், உள்நாடு மட்டுமின்றி பெல்ஜியம் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியை தொடங்க உள்ளதாகவும், இதன் மூலம், 8 ஆண்டுகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில், நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் புதிய தொழில்கள் துவங்க 4,755 கோடி ரூபாய் முதலீட்டில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் நேரடியாக 17,476 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், தூத்துக்குடி எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக, முன்னேற்றத்திற்காக மாநில அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். நாட்டிலேயே மிகப் பெரிய ஃபர்னிச்சர் பூங்கா தூத்துக்குடியில் அமைய இருப்பது தூத்துக்குடிக்கு கிடைத்த பெருமை என முதலமைச்சர் கூறினார்.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து பல மாநிலங்கள் இன்னும் மீளவில்லை என குறிப்பிட்ட முதலமைச்சர், தமிழ்நாடு கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டது மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சிக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார். மாநிலத்தின் மகத்தான வளங்களை முழுமையாக பயன்படுத்தி, மக்களுக்கு சிறப்பான வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதே அரசின் லட்சியம் என்றும் இதுவே திராவிட மாடல் ஆட்சி என்றும் அவர் கூறினார்.
மேலும், தேர்தலுக்கு முன்பாக, தமிழகத்தை மீட்போம் என்று தான் கூறியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதை நோக்கியே அரசு நிர்வாகம் செயல்பட்டு வருவதாகக் கூறினார். அரசின் துரித நடவடிக்கைகள் காரணமாக அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு விரைவில் நெம்பர் ஒன் மாநிலமாக வர உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








