உலக தமிழர்களுக்கு தமிழ்நாடு தான் தாய்வீடு- முதலமைச்சர்

உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு தமிழ்நாடு தான் தாய்வீடு என வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை ஆண்டுவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில்  முதலமைச்சர்…

உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு தமிழ்நாடு தான் தாய்வீடு என வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை ஆண்டுவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது விழாவில் காணொலி மூலம் உரையாற்றிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் பல்வேறு பணிகள் இருப்பதால் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை ஆண்டு விழாவில் நேரடியாக பங்கேற்க முடியவில்லை என்றார்.

மேலும், எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், தமிழ்நாடு தான் அவர்களுக்கு தாய் வீடு. சிலர் கற்பனை மூலம் வரலாற்றை எழுதிக் கொண்டுள்ளனர். நமக்கு உண்மையான வரலாறு உள்ளது. இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் நிலத்தில் இருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ், தமிழன் எங்கு பாதிக்கப்பட்டாலும் கண்ணீரை துடைப்பது என 5 மாபெரும் குறிக்கோள்கள் கொண்ட அரசாக செயல்பட்டு வருகின்றது. திராவிடம் என்ற சொல்லை திட்டமிட்டு தான் நான் குறிப்பிடுகிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திராவிடத் தத்துவத்திற்கு எதிரானவர்கள், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்ககூடாது என நினைப்பவர்கள். அவர்கள் திராவிட இயக்கத்தை, இந்த ஆட்சியை எதிர்க்கிறார்கள். அத்தகைய எதிரிகள் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறார்கள். அவர்களை மீறித் தான், தாண்டித் தான் தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களை புறந்தள்ளி நாம் வாழ்வோம் என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.