கோலியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது குறித்து இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்தாண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், கடைசி போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 5-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் தற்போது நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பல்வேறு சுவராஸ்யமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸின் போது அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் விராட் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடக்கத்தில் சிரித்து பேசிக் கொண்டிருந்த கோலி – பேர்ஸ்டோ வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பிறகு பேர்ஸ்டோ சிறப்பாக ஆடி சதமும் அடித்தார். இதன் காரணமாக கோலி – பேர்ஸ்டோ வாக்குவாதம் சமூகவலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மனம் திறந்துள்ள பேர்ஸ்டோ, “உண்மையில் எதுவும் நடக்கவில்லை. இதை நான் அப்போதே சொல்லியிருந்தேன். கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் எதிர் எதிர் அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே கடினமானது தான். எங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுவதால் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். 2 கடுமையான போட்டியாளர்கள் களத்தில் தங்களுக்கு பிடித்ததை செய்கிறார்கள். 2 அணியிலும் உணர்ச்சிமிக்க 11 வீரர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் நாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சிக்கின்றனர். அவர் (கோலி) மிகுந்த வேட்கையுடன் ஆடுகிறார். அதுதான் அவரை சிறந்த வீரராக நிலை நிறுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
3ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா மற்றும் பன்ட் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 257 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
-ம.பவித்ரா







