உயர்கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்பதே இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்தது தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி பயணிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கம் திட்டத்தொடக்க விழா நடைபெற்றது.…

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்தது தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி பயணிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கம் திட்டத்தொடக்க விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்காக மாணவர்கள் உருவாக்கிய நவீன உபகரணங்களை பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், நீட் தேர்வில் விலக்கு பெற சட்டப்போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளதாக கூறினார். மேலும், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துறை உருவாக்கப்பட்டது எனக்கூறினார்.

கல்வி கற்கும் காலத்திலேயே சமுதாய தேவையறிந்து, படைப்பாற்றலை கண்டறியும் மாணவர்களுக்கு சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்க திட்டம் உதவும் என குறிப்பிட்டார். கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பட்டம் போதாது என தெரிவித்த அவர், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையில் சிறந்தது தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி பயணிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.