மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலால் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. திமுக வின் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்க்கே, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
இதனையும் படியுங்கள்: முதலமைச்சருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அமித்ஷா!
சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் ஆற்றிய உரையில் அவர் தெரிவித்ததாவது..
”தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 70 ஆவது பிறந்த நாளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றி உள்ளார் . ஸ்டாலின் தனது தந்தையை போல நாத்திகவாதியாக இருந்தாலும், எந்த மதத்திற்கும் எதிரானவர் இல்லை.
கோபாலபுரத்தில் தனது 14 வயதில் இளைஞர் அணியை தொடங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதெபோல அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடி ஸ்டாலின் சிறை சென்றார் . அவசர நிலை பிரகடனத்திற்கு எதிரான போராட்டத்தில் அவர் சிறைக்கு சென்றது நாட்டின் ஜனநாயகத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது. அவரது வழிகாட்டுதலால் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது.
கொரோனா பரவலின்போது சிறப்பாக செயல்பட்டார் ஸ்டாலின். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற சிறப்பான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்” என அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
– யாழன்







