“தமிழ்நாடு பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழ்நாடு பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

"Tamil Nadu has become an unsafe state for women" - Annamalai alleges!

சென்னை மாநகர காவல் நிலையத்தில் 25 வயதான பெண் காவலர் ஒருவர் நுண்ணறிவு பிரிவு சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன் தினம் பணி முடிந்த அவர் சென்னை எழும்பூரில் இருந்து பழவந்தாங்கலுக்கு மின்சார ரயில் சென்றார். பழவந்தாங்களில் ரயில் இருந்து இறங்கிய அவர் பிளாட்பாரத்தில் நடந்து சென்றார். அப்போது காவலரை பின்தொடர்ந்த மர்ம நபர் பெண் காவலரின் வாயை பொத்தி கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக தெரிகிறது.

இதனையடுத்து அந்த நபரின் கையைக் கடித்த பெண் காவலர் கூச்சல் போட்டார். தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது.

சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திமுக அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதலமைச்சர்?”

இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.