தமிழ்நாடு ஜிஎஸ்டி வரியை தமிழ்நாட்டிற்கு செலவு செய்ய வேண்டும் – அமைச்சர்

தமிழ்நாட்டில் வசூல் செய்யப்படும் ஜிஎஸ்டி வசூலை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கே செலவு செய்ய வேண்டும் என பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.   மதுரை மாவட்டம் வரிச்சியூரில் கலைஞரின் வரும் முன் காப்போம்…

தமிழ்நாட்டில் வசூல் செய்யப்படும் ஜிஎஸ்டி வசூலை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கே செலவு செய்ய வேண்டும் என பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

மதுரை மாவட்டம் வரிச்சியூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் மற்றும் பிறக்காவல் நிலையத்தை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில் “ஓராண்டாக அமைச்சர் கடுமையாக பணி செய்து வருகிறார் என்றார். அமைச்சர் மூர்த்திக்கு ரத்த பரிசோதனை செய்த போது ரத்த அழுத்தம் சீராக உள்ளது, ஆனால் தமிழ்நாடு மக்களுக்கு தினந்தோறும் ரத்த அழுத்தத்தை அறிக்கைகள் வாயிலாக சிலர் (பாஜக) ஏற்றி கொண்டு வருவதாக சாடிய அவர், தமிழ்நாடு மக்களுக்கு எவ்வளவு ரத்த அழுத்தம் ஏற்படுத்தினாலும் அவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என கூறினார்.

 

பின்னர் பேசிய அமைச்சர் மூர்த்தி, “100 சதவீதம் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் எந்தவொரு பயமும் இல்லை என்றார். மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகிய 2 துறைகளுக்கும் முதலமைச்சர் முக்கியத்துவம் வழங்கி வருகிறார். மக்கள் எந்தவொரு பாதிப்புக்கும் உள்ளாக கூடாது என முதலமைச்சர் மிக கவனமாக உள்ளார் என்றார். கிராம மக்களுக்காக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்திருப்பதாகவும், முதலமைச்சர் விளம்பரத்துக்காக செயல்படவில்லை என்றும் உண்மையில் மக்களுக்காக உழைத்து வருகிறார் என்றும் கூறினார்.

 

விவசாயிகள் நலன் மீது அக்கறை கொண்டதால், விவசாயத்துக்கென தனி பட்ஜெட்டை கொண்டு வந்துள்ளார். மதுரை மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை எட்ட மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழ்நாட்டில் நடப்பது மக்களுக்கான அரசு என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என கூறினார்.

 

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, “தமிழ்நாடு மக்களிடம் தவறான பிரச்சாரம் மூலம் ரத்த அழுத்தம் கொடுத்தால் அதனை அரசு எதிர் கொள்ள தயாராகவுள்ளது என்றார். தமிழ்நாடு அரசு எதனையும் சமாளித்து மக்களுக்காக பணி செய்து வருகிறது. பெட்ரோல், டீசல், கேஸ் விலை நிர்ணயம் செய்வது ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் வசூல் செய்யப்படும் ஜி.எஸ்.டி வரியினை தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒன்றிய அரசு செலவு செய்தால் நன்றாக இருக்கும், மிக குறைந்த அளவிளான ஜி.எஸ்.டி வரியே தற்போது வழங்கப்படுகிறது.

 

6 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் இருந்தாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியில் 60 சதவீத வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார். திமுக அரசுக்கு எதிராக யார் என்ன தவறான பிரச்சாரம் செய்தாலும் மக்கள் பொறுப்படுத்த மாட்டார்கள் என தெரிவித்த அமைச்சர் மூர்த்தி, நிதி நிலைமை பொறுத்து பேருந்து கட்டண உயர்வு குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சரும், முதலமைச்சரும் முடிவு எடுப்பார்கள் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.