300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக தக்காளி, இஞ்சி போன்ற காய்கறிகளின் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் முதல் உணவு சார்ந்த தொழில் செய்பவர்கள், உணவகம் நடத்துபவர்கள் என பலரும் பாதிப்படைந்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நடமாடும் காய்கறி கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும், தக்காளி, சிறிய வெங்காயம் உள்ளிட்டவற்றை உழவர் சந்தைகளில் அதிகளவில் விற்பனை செய்யவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.
ஆய்வுக் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர், ரேசன் கடைகள் மற்றும் கூட்டுறவு சங்க அங்காடிகளில் அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.







