தமிழ்நாடு அரசின் ‘மீண்டும் மஞ்சப்பை’ சிறந்த திட்டம்- மத்திய அமைச்சர்

தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் சிறந்த திட்டம் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு…

தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் சிறந்த திட்டம் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக கண்டறியப்பட்ட பொருட்களுக்கான கண்காட்சியை மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, மாநில அமைச்சர் மெய்யநாதன், செயலாளர் சுப்ரியா சாஹூ உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கான மாற்றுப்பொருட்கள், அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் ஏற்படுத்தும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் பேராபத்தைத் தடுப்பது உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாகவும், இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் 9% மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், 12% எரிக்கப்பட்டுள்ளதாகவும், 79% குப்பைகளாக குவிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


ஒவ்வோர் ஆண்டும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கொட்டப்படுவதாகவும், இதைத் தடுக்க கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ஒருமுறை உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மத்திய அரசின் தடையை முழுமையாக அமல்படுத்தி, பிளாஸ்டிக் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்றும், சுயசார்பு இந்தியாவின் கீழ் ஒருமுறை உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக்குக்கு மாற்றாக இயற்கை சார்ந்த பொருட்களை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் MSME துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் விவசாயமும் செழிக்கும் என்றும் மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளார்.

கடற்பாசி, வைக்கோல், மூங்கில் கழிவுகளில் இருந்து பிளாஸ்டிக்குக்கு மாற்றான பொருட்களை உருவாக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும், மேலும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகி வேலைவாய்ப்பு உயர வேண்டும் என்றும், பிளாஸ்டிக் முற்றிலும் ஒழிய வேண்டும் என்றும் இதற்காக போதிய விழிப்புணர்வை மாணவர்கள், பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அஸ்வினி சௌபே கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டமும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒழிப்புக்கான சிறந்த திட்டம் தான் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே பாராட்டு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.