பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக திமுகவின் ஆர்.எஸ். பாரதி, அகில இந்திய ஓபிசி ரயில்வே ஊழியர்கள் அமைப்பு தெலுங்கானா மாநிலம் பிற்படுத்தப்பட்ட மக்கள் நல அமைப்பு பேராசிரியர் ஜவாஹிர் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி நூற்றுக்கணக்கான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் ஏழு நாட்களாக விசாரிக்கப்பட்டது. இந்த அமர்வில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி நீதிபதி ரவீந்திர பட், நீதிபதி பீலா எம்.திரிவேதி, நீதிபதி ஜெ.பி.பர்டிவாலா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இதில் மத்திய அரசு சார்பிலும் மற்ற மனுதாரர்கள் சார்பிலும் விரிவான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக இன்று திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், பொருளாதாரத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது என்பது ஓ.பி.சி, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினரை அரசியல் சாசனம் உருவாக்குவதற்கு முன்பான காலகட்டத்திற்கு கொண்டு சென்று விடும். இட ஒதுக்கீடு என்பது வறுமை மீட்பு திட்டமாக கணக்கில் கொள்ளக்கூடாது. இட ஒதுக்கீடு என்பது வறுமை, வசதியின்மை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கக்கூடியது அல்ல.
ஒவ்வொரு வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை கணக்கில் கொள்ளாமல் இட ஒதுக்கீடு என்பதை வழங்க முடியாது. அப்படி இருக்கும் பொழுது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை ஒரு குறிப்பிட்ட வர்க்கமாக நிச்சயமாக வகைப்படுத்த முடியாது. இதை ஏற்கனவே இந்திரா சாவ்னி தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
10% இட ஒதுக்கீடு என்பது பொதுப் பிரிவினரின் 50 சதவீதத்திற்குள் வருகிறது என்றும் எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வெவ்வேறு பிரிவுகளாக இருப்பதால் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அரசு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இட ஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கும் முரணானது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது என்பது அசாதாரண சூழலில் கொண்டுவரப்பட்டுள்ளது என அரசு கூறுவது என்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. வறுமை என்பது அனைத்து தரப்பிலும் சமமான ஒன்றாக இருக்கும் பொழுது இதனை இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அசாதாரண சூழல் என எவ்வாறு வகைப்படுத்த முடியும் என்று கேள்வியெழுப்பினார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது என்பது அரசியல் சாசன சட்ட திருத்தமாக கொண்டு வரப்பட்டு விட்டதால் அதனை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என அரசு கூறுவது என்பது ஏற்கனவே இது தொடர்பான விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது என்று கூறினார்.







