திமுகவின் 72 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் மாவட்டச்செயலாளர்கள் மாற்றப்படுவது உறுதியாகியுள்ளது. மேலும் 4 மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது குறித்தும் திமுக தலைமை ஆலோசனை செய்யவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடைபெற்று வரும் திமுக உட்கட்சி தேர்தலில் மாவட்டச் செயலாளர் பொறுப்பிற்கு 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒரு பொறுப்பிற்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தேர்தலின்றி தேர்வு செய்வதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்த நிர்வாகிகளுடன் திமுக மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோவை தெற்கு – தளபதி முருகேசன், கோவை வடக்கு – ரவி, தஞ்சாவூர் தெற்கு – அண்ணாத்துரை, நாமக்கல் மேற்கு – செந்தில், கிருஷ்ணகிரி கிழக்கு – பர்கூர் மதியழகன், தருமபுரி மேற்கு – பழனியப்பன், திருவள்ளூர் மேற்கு- சந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக செல்லத்துரை உள்ள நிலையில், தனுஷ்குமாரை நியமிக்கவும் ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்துள்ள நிலையில், துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு துணைப்பொதுச்செயலாளராக கனிமொழியையும், மதுரை மாநகருக்கு தளபதி அல்லது அதலை செந்திலை நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ள நிலையில், தளபதி இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை மேற்கு, சென்னை வடகிழக்கு, நெல்லை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் போட்டியிருந்தும் மாற்றமில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் திமுக மாவட்டச்செயலாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.








