ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் திட்டத்தை சூழலியல் முக்கியத்துவம் கருதி மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் உறுப்பினர் அகிலேஷ் பிரசாத் சிங் என்பவர், ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே ரயில் பாதை அமைப்பதற்கு ஆண்டு வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே 17.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைப்பதற்கு 2018-19ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு திட்டத்தொகையாக ரூ.208.30 கோடி செலவாகும் என மத்திய அரசு கணக்கிட்டது.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில், 221 கிலோமீட்டர் தொலைவு நீளமுள்ள ரயில் பாதைகளை பல்வேறு ரயில் வழித்தடங்களுடன் இணைக்கும் வகையில் பல்வேறு பணிகளை ரயில்வே அமைச்சகம் தமிழ்நாட்டில் செயல்படுத்தி உள்ளது.
அதேவேளை, தமிழ்நாடு அரசு 2023 ஏப்ரல் 21ம் தேதி மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ராமேஸ்வரம் தனுஷ்கோடி பகுதிகள் உள்ளதால், “ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி” வரையிலான ரயில் திட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.







