2022-2023ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.29,000 கோடி கடன் வாங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மாநில அரசு ரூ.15,000 கோடியை கடனுதவியாக பெற்றது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
2022-23ம் நிதியாண்டின் முதலாவது காலாண்டில் தமிழ்நாடு அரசு ரூ.8,000 கோடி கடனுதவி பெற்றது. ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ரூ.23,500 கோடி கடனுதவி பெற அரசு திட்டமிட்டிருந்தது. மாநில வளர்ச்சி கடன்கள் மூலமாக தமிழக அரசு கடனுதவி பெறுகிறது.
முதலீட்டுத் தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு ஏஜென்சி ஆஃப் இந்தியா லிமிடெட் (ICRA) மதிப்பீடுகள் படி, 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ரூ.1,10,200 கோடி கடனுதவியை 2023 நிதியாண்டின் முதலாவது காலாண்டில் கோரியுள்ளது.
இது நிர்ணயிக்கப்பட்ட தொகையான ரூ.1,90,200 கோடியை காட்டிலும் 42 சதவீதம் குறைவாகும். முந்தைய ஆண்டு கோரிய தொகையான ரூ.1,44,600 கோடியைக் காட்டிலும் இது 23.7 சதவீதம் குறைவாகும். குறைவாக கடன் தொகை கோரியுள்ளதன் மூலம், மாநிலங்கள் போதுமான நிதி வரவை கொண்டுள்ளதை பிரதிபலிக்கிறது. 2022ம் நிதியாண்டில் விநியோகிக்கப்பட்ட போதிய அளவு வரிப் பகிர்மானம் மற்றும் 2023ம் நிதியாண்டில் மாநிலங்கள் கடன் பெற்றுக் கொள்ள மத்திய அரசு அனுமதித்தது ஆகியவையும் இதை பிரதிபலிக்கிறது.
2022-2023 நிதியாண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதத்தை கடனாகப் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. மின்துறை சீர்திருத்தங்களை நிறைவேற்றுதல் மற்றும் அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய அமைப்பில் மாநில அரசுகளின் பங்களிப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து கூடுதலாக 0.5 சதவீத கடனுதவி பெற்றுக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, மாநில அரசுகள் பட்ஜெட்டுக்கு வெளியே கடன் வாங்கியதையும் தெரிவிக்க வேண்டும். பட்ஜெட்டுக்கு வெளியே கடன் வாங்குதல் என்பது, ஒரு குறிப்பிட்ட ஆண்டு அல்லது ஆண்டுகளில் செலவினத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கத்தால் கடனுதவி பெறுவதை குறிக்கிறது. இந்த ஆண்டு முதல் அப்படிபட்ட கடனுதவிகளை மத்திய அரசு ஈடுசெய்யும்.
மத்திய அரசின் வரிப் பகிர்வு மாநிலங்களின் நிதி நிலைமைக்கு உதவியாக இருக்கிறது என்று ரிசர்வ் வங்கி தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30ம் தேதி முடிவடையும் ஜிஎஸ்டி இழப்பீட்டு காலம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்னமும் நிலையற்றத் தன்மையே நிலவுகிறது. தமிழ்நாடு அரசும் ஜிஎஸ்டி இழப்பீட்டு காலத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளது. ஒருவேளை இழப்பீட்டு காலத்தை நீட்டிக்கவில்லை என்றால் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படும் என்று தமிழ்நாடு அரசு மதிப்பீடு செய்துள்ளது.
கணக்குத் தணிக்கையாளரின் தணிக்கை செய்யப்படாத தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, ஏப்ரல் 2022 நிலவரப்படி தமிழ்நாடு அரசின் நிதி வரவு ரூ.29,223.06 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.








