“தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போம்”- அமித்ஷா சூளுரை

தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சூளுரைத்துள்ளார். தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்று வரும் பாஜக தேசிய செயற்குழு…

தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சூளுரைத்துள்ளார்.

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்று வரும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா, அடுத்த 30, 40 ஆண்டுகள் பாஜகவின் காலாமாகத்தான் இருக்கும் என தெரிவித்தார். பாஜக ஆட்சியில் இந்தியா உலகத் தலைவராக உருவெடுக்கும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

மக்களுக்குகாக எந்த நலத்திட்டங்களை கொண்டுவந்தாலும் அதனை எதிர்ப்பதை எதிர்க்கட்சிகள் வாடிக்கையாகக் கொண்டிருப்பதாக அமித்ஷா குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தின் கட்சியாக மாறிவிட்டதாக விமர்சித்த அவர்,  சொந்த கட்சியில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க காங்கிரசார் பலர் போராடி வருவதாகக் கூறினார். கட்சி தங்கள் கையைவிட்டு போய்விடுமோ என்கிற பயத்தில்தான் காங்கிரசில் உட்கட்சி தேர்தலை நடத்த சோனியா காந்தி குடும்பம் தயங்குவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்தார்.

தெலங்கானாவிலும், மேற்கு வங்கத்திலும் நடைபெற்று வரும் குடும்ப ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டு வரும் என தெரிவித்த அமித்ஷா,  ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என சூளுரைத்தார்.  குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என சிறப்பு விசாரணைக் குழு அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது வரலாற்று சிறப்புமிக்கது என்று அமித்ஷா மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.