இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியுடன் உள்ளது – அமைச்சர் பொன்முடி

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். விழுப்புரம் திருவிக வீதியிலுள்ள அரசு மகளிர் மாதிரி மேல் நிலைப்பள்ளியில் புதியதாக 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆய்வக கட்டடத்தினை…

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

விழுப்புரம் திருவிக வீதியிலுள்ள அரசு மகளிர் மாதிரி மேல் நிலைப்பள்ளியில் புதியதாக 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆய்வக கட்டடத்தினை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன்,புகழேந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்,ஆட்சியர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் பொன்முடி,பெண்கள் கல்வி பயில வேண்டுமென்பதால் தான் முதலமைச்சர் பெண்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், திராவிட மாடல் ஆட்சியில் அதிக பெண்கள் கல்வி பயின்று உயர்கல்விக்கு செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைக்க வேண்டுமென ஒன்றிய அரசு அறிவுறுத்துவதாகவும், அப்படி செய்தால் இடைநிற்றல் கல்வி அதிகரித்துவிடும் என்பதால் தான் முதலமைச்சர் அதனை வேண்டாம் என மத்திய அரசை எதிர்த்து வலியுறுத்துகிறார்.

கருணாநிதி முதல்வராக இருந்த போது பொறியியல் கல்லூரிகளுக்கு நுழைவு தேர்வினை ரத்து செய்ததால் தான் பொறியியல் பயிலுபவர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதத்திலிருந்து 75 சதவிகிதமாக உயர்ந்தது.ஆனால் இப்போது உள்ள நீட் தேர்வு மூலம் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் தமிழ்நாட்டில் அதிக அளவு மருத்துவம் படிக்கின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் தான் தமிழ்நாட்டிற்கு என்று தனி கல்வி கொள்கை என்பதை அண்ணா காலத்திலிருந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும் இருமொழி கொள்கையை தமிழக அரசு வலியுறுத்துவதாகவும், விருப்பட்டால் மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு உறுதி நிலைபாட்டுடன் இருபதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.