கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும்; இதுபோன்று இனி நிகழாமல் தடுக்க செயல்முறைகள் வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை 13ம் தேதி அன்று செய்திகளில் கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தனது பள்ளி விடுதியின் மூன்றாம் மாடியில் இருந்து விழுந்து இறந்த செய்தி கேட்டு அதிர்ந்தோம். மரணமடைந்த குழந்தையின் தாய் ஊடகங்களில் மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளும், அதைத் தொடர்ந்து பள்ளிக்கு எதிராக இந்தச் சம்பவத்திற்கும் இதற்கு முன் இதே பள்ளியில் நிகழ்ந்ததாக கூறப்படும் மற்ற சந்தேக மரணங்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கும் நீதி கேட்டு போராட்டங்கள் நடந்ததும், உச்சகட்டமாக அந்தப் போராட்டம் வன்முறையாக மாறி அந்தப் பள்ளி தீக்கிரையாக்கப்பட்ட சம்பவமும் அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கு இப்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இந்த சம்பவத்தில் உண்மை வெளிவரும் என்றும், குழந்தையின் இறப்பிற்கு காரணமான குற்றவாளிகள் கண்டிப்பாக கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம். எதிர்பார்க்கிறோம்.
குழந்தைகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து இயங்கி வரும் கள செயல்பாட்டாளர்களின் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பான தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம், குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி உரிமைகளை உறுதி செய்யவும் உழைத்துவரும் சூழலில், இதுபோன்ற சம்பவங்கள் கல்வி மீதும் பள்ளியின் மீதும் அதிருப்தியை உருவாக்கி பெண் கல்வியில் சமூக நீதியை உயர்த்தி பிடித்து தமிழ்நாடு உருவாக்கி இருக்கும் முன்னேற்றத்தை பின்னோக்கி தள்ளி விடுமோ என அஞ்சுகிறோம்.
குழந்தைகளின் மகிழ்ச்சியான கல்வி உரிமையை பாகுபாடின்றி அனைவருக்கும் உறுதி செய்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் தங்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு எங்களின் ஆலோசனைகளை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.
குழந்தைகள் பாதிக்கப்படும் சம்பவங்களில் அவர்களின் அடையாளங்களை வெளியிடுவது குழந்தைகளின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.
பாதிக்கப்படும் குழந்தைகளின் அடையாளங்களை வெளிடுவதை சட்டப்படி தடுக்கும் வகையிலும் அதனை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து அதனை மீறும் தனி நபர்கள், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.








