தமிழ் நாடு அமைச்சரவையில் முதலமைச்சர் விஜய் உட்பட 35 அமைச்சர்கள் உள்ளனர். மேலும் வளர்ச்சி பணிகளுக்காக மாவட்டம் வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த கட்சிகளான விசிக, காங்கிரஸ், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ் நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டமாகும்.
இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தவிர, முக்கிய திட்டங்கள், பல்வேறு முதலீடுகள் மற்றும் சலுகைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




