கச்சத்தீவு மீட்பில் வெற்றியை ஈட்டுமா பாஜக?

‘கச்சத்தீவு’ தமிழ்நாட்டு மக்கள், மீனவர்கள், அரசியல் கட்சிகள் மத்தியில் அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தை. இந்தியாவின் ராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே மன்னார் வளைகுடாவில் உள்ள சிறிய தீவு தான் கச்சத்தீவு. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை,…

‘கச்சத்தீவு’ தமிழ்நாட்டு மக்கள், மீனவர்கள், அரசியல் கட்சிகள் மத்தியில் அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தை. இந்தியாவின் ராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே மன்னார் வளைகுடாவில் உள்ள சிறிய தீவு தான் கச்சத்தீவு. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களால் தொழில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கச்சத்தீவு உள்ளது. 1974ல் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் படி, தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டிலும், ராமநாதபுரம் ஜமீன் கட்டுப்பாட்டிலும் இருந்த கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டது.

கச்சத்தீவு ஒப்பந்தத்தின் படி இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சத் தீவில் தங்கள் மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளவும், அங்குள்ள புகழ்பெற்ற அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்கவும் உரிமையுண்டு. ஆனால், கச்சத்தீவு அமைந்திருக்கும் மன்னார் வளைகுடா பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க எந்தவித உரிமையும் இருநாட்டு ஒப்பந்தத்தின் போது வழங்கப்படவில்லை.

இதனால், கடல் எல்லை அறியாமல், சர்வதேச கடல் எல்லைக்குள் நுழைந்துவிடும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவது, தாக்கப்படுவது, கைது செய்யப்படுவதுமான சம்பவங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்துவதும் தொடர்ந்து வருகிறது. மத்தியில் காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் திமுக அரசு இருந்தபோது இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு, மன்னார் வளைகுடாவில் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிலைநாட்டுவோம் என்று தமிழ்நாட்டை ஆண்ட, ஆளும் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக சொல்லிவருகின்றன. கச்சத்தீவு மீட்பை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் தொடரப்பட்ட வழக்குகளும் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் திராவிட கட்சிகளால் இதுவரை இயலாத ஒன்றை, சாத்தியப்படுத்தும் முயற்சியில் கச்சத்தீவு பிரச்சனையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி. தமிழ்நாட்டில் பாஜகவுக்கென ஒருசில மாவட்டங்கள் தவிர்த்து இதர மாவட்டங்களில் வலுவான கட்டமைப்புகள் இல்லாத சூழலில், கட்சியை பலப்படுத்த அதன் தலைவர்கள் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். திராவிட இயக்கங்களால் தாரைவார்க்கப்பட்டு, பின் திராவிட இயக்கங்கள் முட்டி மோதியும் அவற்றால் சாத்தியப்படாத கச்சத்தீவு மீட்பை சாத்தியப்படுத்தி, தமிழ்நாட்டில் எப்படியேனும் தனக்கான கட்டமைப்பு, செல்வாக்கை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று தீவிர முனைப்பு காட்டிவருகிறது பாஜக. மத்தியில் ஆட்சியில் இருப்பது எந்த அளவுக்கு பலமாக இருக்கிறதோ அதைவிட, கச்சத்தீவின் உரிமையாளரான இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியாக சூழல் பாஜகவுக்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. 

பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பம், வீதிக்கு வந்த மக்கள் என்று இலங்கை நிலைகுலைந்துள்ள சூழல், கச்சத்தீவு மீட்பை சாத்தியப்படுத்தலாம் என்ற பாஜகவின் எண்ணத்துக்கு அடித்தளமிட்டது. இலங்கையில் உச்சகட்ட குழப்பம் நீடித்த சூழலில், அங்கு அதிரடியாக பயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆட்சியாளர்கள் முதல் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த தலைவர்கள், தமிழின தலைவர்கள் வரை அனைவரையும் சந்தித்தார். மத்திய அரசின் அறிவுறுத்தலின் படியே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இலங்கை சென்று வந்தார் என்று கூறப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் பேட்டியளித்த அண்ணாமலை, பிரதமர் மோடி கச்சத்தீவை நிச்சயம் மீட்பார் என்று உறுதியாகக் கூறியது அனைவரின் புருவங்களையும் உயர்த்தியது. இதைவிட ஒரு படி மேலே சென்ற பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் கச்சத்தீவை மத்திய அரசு நிச்சயம் மீட்கும் என்று திரியைக் கொளுத்தினார்.

இப்படி தமிழ்நாட்டு பாஜக தலைவர்களின் பேட்டிகள் விவாதப்பொருளான சமயம், என்னதான் நெருக்கடியான சூழலில் இருந்தாலும் இலங்கை எப்படி கச்சத்தீவை விட்டுத்தரும்? சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் கட்டுப்படுத்த இந்தியாவும் அதற்கு நிகராக நேசக்கரம் நீட்டிவரும் சூழலில், இந்தியா எப்படி கச்சத்தீவை வலியுறுத்தி மீட்கும்? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.

கச்சத்தீவை விலைக்கு வாங்க இந்தியா முயற்சிக்கலாம் என்றும், இது அந்நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு சிறிய தீர்வாக அமையும் என்று இருநாட்டு சூழலை கவனித்து வரும் சில மூத்த பத்திரிகையாளர்கள் அனுமானித்தனர். 1974-ல் ஏற்படுத்தப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை திரும்பப்பெறுவதன் மூலமாகவோ அல்லது ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை மூலமாகவோ, இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள பல மில்லியன் டாலர் கடனுதவிக்கான பிரதிபலனாகவோ கச்சத்தீவை அந்நாட்டிடம் இருந்து இந்திய அரசு கேட்டுப் பெறலாம் என்று விவரிக்கும் மூத்த பத்திரிகையாளர்கள், கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத்தர நெருக்கடி காரணமாக அந்நாட்டு ஆட்சியாளர்கள் ஒப்புக்கொண்டாலும், அங்கு நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைக்கு எதிராக கொடி பிடிக்கும் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் இதை கட்டாயம் எதிர்க்கும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகின்றனர்.

ஆனால் தேர்தல் நேரங்களிலும், அவ்வப்போது மீனவர்கள் தாக்கப்படும் நேர்வுகளிலும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தமிழின உணர்வாளர்களின் அறிக்கைகள் “கச்சத்தீவை மீட்க வேண்டும், தமிழ்நாட்டின் உரிமையைக் காக்க வேண்டும்” என்று உரக்கப் பேசிவரும் நிலையில், அதற்கெல்லாம் முத்தாய்ப்பாகவும், தனக்கான பொன்னான வாய்ப்பாகவும் எப்படியேனும் கச்சத்தீவு மீட்பை சாத்தியப்படுத்த நினைத்து காய்களை நகர்த்தி வருகிறது பாரதிய ஜனதா கட்சி.

எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தல் களத்தை தமிழ்நாட்டில் தனக்கு சாதகமாக மாற்றவும், காங்கிரஸை விட அதிக இடங்களை கைப்பற்றி காங்கிரசின் செல்வாக்கை குறைக்கவும் பல வியூகங்களை வகுத்துவருகிறது பாஜக. தொடர்ச்சியாக மாநில திமுக அரசைக் கண்டித்து அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என்று பாய்ச்சல் காட்டி வரும் பாஜக, அதன் பிரதான கூட்டணிக்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தையும் நிரப்பப் பார்க்கிறது. திமுக, அதிமுகவால் முடியாத கச்சத்தீவு மீட்பை 2024 மக்களவைத் தேர்தலுக்குள் நிறைவேற்றி, தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிரான கட்சி பாஜக என்ற பிம்பத்தை உடைத்து, தமிழ்நாட்டு உரிமைகளை காக்கும் கட்சி தான் பாஜக என்று நிறம் மாற, தீவிர முயற்சிகளை எடுத்துவருகிறது பாஜக. கச்சத்தீவு மீட்பு என்பது அண்ணாமலையுடனோ அல்லது தமிழ்நாட்டு அரசியலுடனோ நின்றுவிடவில்லை. இந்தியா – இலங்கை என்னும் இரு நாட்டு பிரச்சனையாகவும், இரு நாட்டு ஆட்சியாளர்களுக்கு நிகராக இரு நாட்டு எதிர்க்கட்சிகள், மக்கள் என்று மிகப்பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில், அண்ணாமலை சொல்வது போல் மோடி அதை மீட்பாரா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பாஜகவின் முயற்சி அக்கட்சியின் அரசியல், வளர்ச்சிக்கானதாக இருந்தாலும், கச்சத்தீவு மீட்பால் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு, இழந்த உரிமைகள் மீட்கப்படும் என்பதே நிதர்சனம். பாஜகவின் முயற்சி கைகூடுமா என்பதற்கான பதில் காலத்தின் கைகளில் அடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.