கதைகளின் கதை கட்டுரைகள்

அமெரிக்காவின் சார்ப்பட்டா The Rock கதை


யுவராம் பரமசிவம்

கடின உழைப்பு ஒருபோதும் தோற்காது என்பதை தனது வாழ்க்கைப் பயணத்தின் மூலம் ரசிகர்களுக்கு உணர்த்தி வருகிறார் தி ராக். வாழ்க்கையில் பல அடி, உதைகளை வாங்கி, அனைத்தையும் தாண்டி உலக மக்களால் உற்றுநோக்கும் ராக் எனும் டுவெயின் ஜான்சனின் வாழ்க்கை பயணத்தை சற்றே புரட்டிப் பார்க்க முயல்கிறது இந்த சிறப்பு கட்டுரை…

 

மல்யுத்த பாரம்பரியம் கொண்ட அமெரிக்க குடும்பத்தில் பிறந்த சிறுவன் ஒருவன், எதிர்காலத்தில் தானொரு கால்பந்தாட்ட வீரனாக வேண்டும் என்று கனவு காண்கிறான். கால்பந்தாட்டத்தில் பெரிய ஜாம்பவானாக வேண்டும் என்பது அந்த சிறுவனை இரவு பகலாக உலுக்கியெடுக்கிறது. பள்ளிச்செல்லும் வயதிலேயே பள்ளியில் நடக்கும் சிறுசிறு போட்டிகளிலும் தன் பெயரை பதிவு செய்து கொண்டு, போட்டிகளில் பங்கேற்ற சிறுவனுக்கு, மியாமி பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பது ஒரே இலக்காகவே இருந்தது. பள்ளிக்கல்வி முடித்து ஒரு வழியாக கல்லூரி சேர்ந்த அந்த இளைஞனுக்கு, கல்லூரி அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும், ஒரு மாற்றுவீரர் என்கிற நிலையிலேயே களமிறங்க வாய்ப்பளிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

என்ன நடந்தாலும் சரி, கிடைக்கும் வாய்ப்பில் என்னை நான் நிரூபிப்பேன் என்று மனதுக்குள்ளாகவே நினைத்துக்கொண்ட அந்த இளைஞன், உரிய தருணத்துக்காக காத்து கொண்டிருந்த போதுதான், மியாமி ஹரிகேன்ஸ் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்த போட்டிகளிலும் பங்கேற்று கோப்பையை அல்லுகிறான். ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து, 4 மாதங்கள் அந்த இளைஞனை படுக்கையில் தள்ளியது. இதனால் கால்பந்தாட்ட கனவும் கலைந்து போனது. கிடைக்கும் வாய்ப்பு எதுவாக இருந்தால் என்ன…. மற்றவர்கள் முன்பு சாதித்து காட்டுவதுதான் நமக்கு அழகு என்று, தன் தந்தையை போன்று மல்யுத்த வீரராகலாம் என முடிவு செய்து, பாடிபில்டிங் பயிற்சியை தொடங்குகிறான் அந்த இளைஞன். இரவு பகலாக பயிற்சி… பல அடிகள், பல உதைகள், ஏமாற்றம், விமர்சனம், எதிர்ப்பு என்று அனைத்தையும் கடந்து, அடுத்த சில ஆண்டுகளிலேயே அமெரிக்காவின் சார்ப்பட்டாவாக மல்யுத்த மேடைகளையும், ஹாலிவுட் படங்களிலும் கலக்க ஆரம்பித்தார் அந்த வீரர். அவர்தான், ராக் என்று உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் டுவெயின் டக்ளஸ் ஜான்சன்.
எதிர்காலத்தில் நாம் இந்த வேலைக்குத்தான் செல்ல வேண்டும். இந்த துறையில் தான் சாதிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டு அதில் வாய்ப்பு கிடைக்காமல், கிடைத்த வாய்ப்பில் உழைப்பை செலுத்தி சாதனை மகுடம் ஏற்றவர்களுக்கு உதாரணமாகவும் நம்பிக்கை நாயகனாகவும் இருக்கிறார் ராக் என்கிற டுவெய்ன் ஜான்சன். ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒருவர் உலகம் போற்றும் நாயகனாக மாறியது எப்படி, ரெஸ்லிங் வீரர் எப்படி சினிமா நாயகனாக உருவெடுத்தார்? சினிமாவில் நுழைந்ததால் மட்டுமே ராக் போற்றப்படுகிறாரா? ராக்கின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடைதேடி பயணிக்கிறது இன்றைய கதைகளின் கதை…

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹேவார்டு நகரத்தில் 1972ம் ஆண்டு ராக்கி ஜான்சன் – அடா ஜான்சன் தம்பதிக்கு மகனாக பிறந்தவர்தான் ராக் என்கிற டுவெய்ன் ஜான்சன். பிறப்பிலேயே மல்யுத்தம் தொடர்புடைய குடும்பத்தில் பிறந்தாலும், இயல்பிலேயே விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்தார் ஜான்சன். ஆனால், காலம் அவரை மீண்டும் மல்யுத்தத்துக்கு கொண்டு வந்தது. ஆனால், ஜான்சன் ஒரு மல்யுத்த வீரராக தன்னை தயார்படுத்திக் கொள்வதை அவரது தந்தை ராக்கி ஜான்சன் விரும்பவில்லை. தொடக்கத்தில் அதனை எதிர்த்தாலும், மகனின் லட்சியத்தை புரிந்துகொண்ட தந்தையாக ஜான்சனுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார் ராக்கி ஜான்சன். ஓராண்டு தொடர் பயிற்சிக்கு பின் பயிற்சி போட்டிகளில் தலைகாட்ட ஆரம்பித்தார். வழக்கத்திற்கு மாறாக, உயரமாகவும் அகலமான உடல் அமைப்பையும் பெற்றிருந்த ஜான்சனுக்கு மல்யுத்த பயிற்சி மேலும் உடலை மெருகேற்றியது. ஆனாலும் ஆரம்ப போட்டிகளில் பருமனான உடல் அமைப்பை கொண்டிருந்ததால், கேலிகளுக்கும் ஆளானார்.
முதல் போட்டியில் தி ப்ரூக்ளின் ப்ராவ்லர் என்பவரை எதிர்கொண்டு வெற்றிபெற்றர். ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் கிறிஸ் காண்டிடோ மற்றும் ஓவன் ஹார்ட் உடன் மோதி தோல்வியை சந்தித்தார். பயிற்சி போட்டிகளில் அதிகப்படியான தோல்விகளை சந்தித்து வெற்றிக்கான வழிகளை கற்றறிந்தார். தற்போதும் WWE போட்டிகளை பார்ப்பவர்கள், கேட்கும் சத்தத்தை வைத்து விழும் அடி உதைகள் நிஜமானவை என்று நம்புகின்றனர். உண்மையில் WWE ஒரு போலி விளையாட்டு எனபது பலருக்கும் தெரிவதில்லை. இந்த போட்டிகளின் போது ஏற்படும் ஆக்ரோஷமான சண்டைகளால் விபரீதிம் நிகழ்வதும் மறுக்க முடியாததாகவே இருக்கிறது. மேடையை விட்டு கீழே இறங்கி இருக்கும் பொருட்களை கொண்டு தாக்குவது, உயரமான கூண்டுகளில் ஏறி சண்டை போடுவது, எதிர்பாராமல் மேடைக்கு கீழ் பகுதிகளில் தூக்கி வீசப்படுவது போன்ற ஆக்ரோஷமான செயல்களால் போட்டிகளின் போது எலும்பு முறிவு, தசை பிடிப்பு உள்ளிட்டவை மல்யுத்த வீரர்களுக்கு சவாலாக அமைகிறது.


கூட்டமாக சேர்ந்து ஒரு வீரரை மட்டுமே குறிவைத்து தாக்குவது போன்ற நிகழ்வுகளால் இந்த போட்டியில் உடல் தசை கிழிகின்றன, எலும்புகள் முறிகின்றன, ரத்தம் தெரிக்கின்றன. இவை அனைத்தையும் தாங்கியபடி எதிர்வீரரை சமாளிப்பதே மல்யுத்த வீரர்களுக்கு பெரிய சவால். இதற்கு நடுவே தன்னை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொண்டிருந்தார் ஜான்சன். மக்களின் ஆதவை பெறுவது, அவர்களை ஈர்ப்பது ஒவ்வொரு மல்யுத்த வீரருக்கும் சவாலாக இருக்கிறது. அனைத்தையும் சமாளிக்க வேண்டுமனால் மன உறுதியும் தொழில் மீதான காதலும் அவசியமானது. அந்த காதல் தான், அண்டர்டேக்கரின் ரசிகர்களாக இருந்த பலரை தி ராக் எனும் டுவெயின் ஜான்சனின் ரசிகர்களாக மாற்றியது. தன்னுடைய திறமையை நம்பி ஜெர்ரி லாவ்லர் இன் யுனைடெட் ஸ்டேட்ஸ் ரெஸ்லிங் அசோசியேஷனில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ஜான்சன். அங்கு “ஃப்ளெக்ஸ் கவானா” என்ற ரிங் பெயருடன் போட்டியிட்டார் ஜான்சன். மேலும், 1996ம் ஆண்டு கோடையில், பார்ட் சாயர் என்பவருடன் இணைந்து உலக டாக் டீம் சாம்பியன்ஷிப்பை இரண்டு முறை வென்றிருந்தார். தொடக்கத்தில் கிடைத்த வெற்றிகள் ஊக்கத்தை கொடுக்கவே, தன் வேலையில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.

உலக ரசிகர்களால் கொண்டாடப்படும் wwe தொடக்க காலத்தில் wwf என்ற பெயருடனேயே செயல்பட்டது. wwfல் களமிறங்கிய ஜான்சன், ராக்கி மாவியா என்ற் பெயரிலேயே களமாடினார். தன்னுடைய தாத்தா மற்றும் தந்தையிடம் இருந்து இதனை பின்பற்ற தொடங்கினார். கட்டுமஸ்தான உடலுடன் ரிங்கில் நுழையும் ஜான்சன், நீல நிற உடைகளையும், பேட்ஜுகளையும் அணிந்துவந்து சண்டை போடுவதை வழக்கமாக்கினார். தன்னை மக்கள் விரும்பத்தக்க வீரராகவே காட்டிக்கொள்ள முயன்றார் ஜான்சன். ரிங்கில் எதிராளிக்கு முன்பு நின்றுகொண்டு, அநாயசமாக அவர் புருவத்தை உயர்த்தி பார்க்கும் அழகை ரசிப்பதற்கே பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. மக்களை உற்சாகப்படுத்துவதே முதல் நோக்கம் என்று ரிங்கில் குதித்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எப்போதும் நல்லவனாகவும், நாகரீகமாகவும் சண்டை போடும் ஜான்சனை வெறுக்கத் தொடங்கினர். ஜான்சன் யாரை எதிர்க்கிறாரோ அவருக்கே ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

1997ல் இன்டர்கான்டினன்டல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஓவன் ஹார்ட்டிடம் தோற்ற போட்டியில் பலத்த காயமடைந்த ஜான்சன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு காயத்திலிருந்து மீண்டு வந்தார். எதிர்பாராமல் ஏற்பட்ட காயத்திலிருந்து சிகிச்சை மூலம் மீண்டு வந்த ராக் மீண்டும் ரிங்கில் இறங்கும் போது தி ராக் ராக்கி மாவியா என்ற பெயருடன் இறங்கினார். அந்த போட்டியில் வில்லன் அவதாரம் எடுத்திருந்தார். போட்டியில் நுழையும்போதே கர்வத்துடனும், ஆக்ரோஷமாக குரல் உயர்த்தியும் ரசிகர்களை தன்வய்ப்படுத்தினார். தி ராக் ராக்கி மாவியா என்ற பெயர் மிக விரைவிலேயே தி ராக் என மாற்றமடைந்தது. அண்டர்டேக்கர், ஜான்சீனா, பிராக் லென்சர் போன்ற வீரர்களின் பெயர் பலகைகள் இடம்பெற்று வந்த அரங்கத்தில் முதல்முறையாக தி ராக் என்ற பெயரும் சேர்ந்தது.

வில்லன் அவதாரத்தை தான் ரசிகர்கள் விரும்புகின்றனர் என்பதை உணர்ந்த ஜான்சன், வில்லனுக்கே உரிய தொனியில் சண்டையை அமைத்துக் கொண்டார். ஒப்பந்தம் செய்யும்போது யாருடன் ஒப்பந்தம் செய்யப்படுகிறாரோ அவரையே அடித்து துவைப்பது உள்ளிட்ட ஜான்சனின் செயல்கள் ரசிகர்களுக்கு விருந்தாக மாறின. ரிங்கில் நின்று கொண்டு பேசும் தன்னை ஒரு மூன்றாம் நபராக அறிமுகம் செய்து கொண்டு, What the rock says, என்று ராக் பேசும் வசனங்கள் அதுவரை யாரும் கையாளாத புதிய யுக்தியாக அமைந்தது. முக்கியமாக மொட்டை அடித்துவிட்டு, அகன்ற உடல் அமைப்புடன், கருப்பு நிற கண்ணாடியை அணிந்து கொண்டு ராக் பேசும் காட்சிகள் அரங்கத்தை அதிரவைத்தது. பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென்று கண்ணாடியை கழற்றிவிட்டு அவர் பார்ப்பதை ரசிகர்கள் வியந்து பார்த்தனர். எம்ஜிஆர் படங்களில் எப்படி, முதல் மூன்று அடிகளை வாங்கிக்கொண்ட எம்ஜிஆர், 4வது அடியை எதிரிக்கு பரிசளிப்பாரோ, கிட்டத்தட்ட இதே தொனியைத்தான் ராக்கும் பின்பற்றினார். தொடர்ச்சியாக அடிகளை வாங்கிக்கொண்டு எதிரணியில் இருப்பவனை சோர்வாக்கிவிட்டு பிறகு தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்படி ஒரு ஆட்டத்தை இவரிடம் கண்டிராத ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

“மேன்கைண்ட்” உடன் சண்டையிட்டு முதன்முறையாக WWF சாம்பியன்ஷுப்பை வென்றார். 1999 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராயல் ரம்பிள் இல் “ஐ குவிட்” போட்டியில் வென்று அடுத்த சாம்பியன்ஷிப்பை கைப்பற்றினார். த்ன்னுடைய வயதையொத்த வீரர்கள் மட்டுமல்லாமல், தமக்கு அடுத்த் தலைமுறை ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். காரணம், ஹல்கோகன், ஸ்டோன் கோல்டு, ஜான் சீனா என்று மூன்று தலைமுறை வீரர்களையும் வென்று தான் தான் people champion என்பதை நிரூபித்திருந்தார் ராக். இதனைத் தொடர்ந்தே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கத் தொடங்கினார். ஏற்கனவே ராக்கை ரிங்கில் கொண்டாடிய ரசிகர்கள் அவரது நிகழ்ச்சிகளையும் க்ண்டுகளித்து ரேட்டிங்கை எகிறவைத்தனர். தொலைக்காட்சித் தொடர்கள் துவங்கி, ஹாலிவுட் திரையுலகிற்கும் நகர்ந்திருந்தார் ராக். மம்மி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் துவக்கம் மற்றும் இறுதி காட்சிகளில் மட்டுமே ராக் நடித்திருந்தார். ஸ்கார்ப்பியன் கிங் ஆக நடித்திருந்த ராக்கின் நடிப்பு பெரியளவில் பேசப்ப்ட்டது. பொருளாதார ரீதியாக மம்மி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெற்றிபெற, அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் குவிந்தன.

டுவெய்ன் ஜான்சன் என்ற இயற்பெயரை கொண்ட ஜான்சன், உண்மையாகவே போட்டியில் ரத்தம் சிந்தித்தான் ரசிகர்களின் ஆதர்ச நாயகனாக கொண்டாடப்பட்டார். மம்மி ரிட்டர்ன்ஸ் படத்தில் ராக் நடித்த ஸ்கார்பியன் கிங் பெயரிலேயே அடுத்தப்படம் உருவானது. அதிலும் நடித்தார். முதல் படத்திற்கு 42 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய சாதனையையும் செய்தார். வில்லத்தனம், நாயக அவதாரம், நகைச்சுவை என்று பன்முகத்தன்மை கொண்டு திரையுலகை ஆட்டுவிக்கத் தொடங்கினார் ஜான்சன். குறிப்பாக பிரபல கால்பந்தாட்ட வீரராக, தி கேம் பிளான் திரைப்படத்திலும், கெட் ஸ்மார்ட் திரைப்படத்தில் ஏஜென்ட் 23 ஆக நடித்திருந்தது ராக்கின் ஆரம்பகால திரைவாழ்க்கையில் குறிப்பிடத்தக்க அத்தியாயங்கள். முக்கியமாக இந்திய ரசிகர்களின் ஆஸ்தான ஹாலிவுட் நாயகனாக இருந்தார் ராக்.

ராக் பிறப்பில் ஒரு அமெரிக்கராக இருந்தாலும், அவரது முகத்தோற்றம் ஒரு இந்தியருக்கான முகத்தோற்றத்தை போலவே ஓரளவுக்கு ஒத்திருந்தது. ஆகையால் ஆசியாவை சேர்ந்தவர்களின் மனதில் ராக் எளிமையாக நுழைந்து கொள்கிறார். ராக்கின் திரை வாழ்க்கையில் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் ((fast and furious)) முக்கிய இடத்தை பிடித்த திரைப்படம் எனலாம். ராக் மட்டுமல்ல. அதில் நடித்த அனைவருக்குமே திருப்புமுனையை ஏற்படுத்தியது fast and furious.

The Rundown, Welcome To The Jungle, Walking Tall, Southland Tales என சுமார் 50 படங்களில் நடித்துள்ள ராக், 15க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் இடம்பெற்றிருக்கிறார். இவை மட்டுமின்றி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, இசை ஆல்பங்களில் நடிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பது என பல்துறை வித்தகராக வலம் வருபவர். ரத்தம், வியர்வை, மரியாதை, இவை மூன்றுமே முக்கியமானவை என்கிறார். இந்த மூன்றில் முதல் இரண்டை எவ்வளவு கஷ்டப்பட்டேனும் நீங்கள் கொடுத்து விட்டால், மூன்றாவது இடத்தில் இருக்கும் மரியாதை நம்மை தானாக தேடிவரும் என்பதுதான் ராக் என்கிற ஜான்சன் கூறும் தத்துவம். உண்மையில், தனது வாழ்க்கையிலும் இதையேதான் செய்கிறார்.
2018ம் ஆண்டில் ஒருநாள் வழக்கமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் ஜான்சன். 50 பவுண்ட் ((pound))எடையை தூக்கி பயிற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக அவரது கண்ணத்தில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. இதனை வீடியோ பதிவு செய்த ஜான்சன், ரத்தத்தை கையால் தொட்டு நாக்கில் வைத்து ருசி பார்த்ததுடன், its very tastee என்றும் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். ஏதோ ஐஸ்கிரீமை சாப்பிடுவது போன்ற பாவனையில் ரத்தத்தை ருசி பார்த்துவிட்டு, மீண்டும் பயிற்சியில் இறங்கிவிட்டார். இவ்வளவுதான் ஜான்சன்.

50 வயதை எட்டியுள்ள ராக்கின் ரசிகர்களை பொறுத்தவரை, அவர் எப்படி உடலை பராமரிக்கிறார் என்பதே பெருங்கேள்வியாக உள்ளது. 5 வருடங்களுக்கு முன்பு வரை, நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் கலோரி உணவு எடுத்துவந்த ஜான்சன், தற்போது 6 ஆயிரம் கலோரிகளாக மாற்றியுள்ளார். நாள் ஒன்றுக்கு 7 முறை சீராக உணவு எடுப்பதன் மூலம் உடல் அமைப்பை தக்கவைப்பதாக கூறப்படுகிறது. இறைச்சி இல்லாமல் ஜான்சன் ஒருநாளும் உணவு எடுத்துக்கொள்வதில்லை. காலையில் கோழிக்கறி, மாட்டிறைச்சி, உருளைக்கிழங்குகளை எடுத்துக்கொள்ளும் ஜான்சன், மதிய நேரத்திற்கு முன்பாக காய்கறிகளை பச்சையாகவும், சமைத்த நிலையிலும் தேவையான அளவுக்கு தினசரி கட்டாயமாக எடுத்துவருகிறார. மாலை நேரங்களில் கடல் மீன்கள், கடல் உணவுகளில் கவனம் செலுத்துகிறார். குறிப்பாக, சால்மன் மீன் உடலுக்கு நல்லது என்று ரசிகர்களுக்கு அறிவுரையும் கூறுகிறார்.

அமெரிக்க மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன், அவர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதே எனது குறிக்கோள் என்று நேர்காணல் ஒன்றில் பேசினார் ராக். ஆம், மக்கள் விரும்பினால் அமெரிக்க அதிபர் தேர்தலிலும் தான் போட்டியிட தயார் என்றும் தெரிவித்தார். கடந்த ஆண்டு ராக் தெரிவித்த இந்த கருத்தானது இணையத்தை ஆக்ரமித்தது. அடுத்த சில வாரங்களிலேயே அமெரிக்க நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் ராக்கை அதிபராக்குவதற்கு 46 சதவீத அமெரிக்க மக்கள் விருப்பம் தெரிவித்தனர். சர்வதேச அரசியலை ஆட்டிப்படைக்கும் அமெரிக்காவின் அதிபராக ராக்கை தேர்வு செய்வதில் உண்மையில் மக்கள் ஈடுபாட்டுடனே உள்ளனர் என்பதை அந்த ஆய்வு முடிவு வெளிக்காட்டுவதாக இருந்தது. ராக்கிற்கு கிடைத்த இந்த ஆதரவைத் தொடர்ந்து மீண்டும் இணையத்தை அளரவிட்டனர் அவரது ரசிகர்கள். ஆனால், அரசியலில் எனக்கு ஈடுபாடு இல்லை, நான் அரசியல்வாதியும் அல்ல, மக்களின் ஆதரவுக்கு நன்றி, இது என்னை பல விஷயங்களை கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்துகிறது என்று தெரிவித்தார் டுவெயின் ஜான்சன்.

2020ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலை உலகமே உற்றுநோக்கிய நிலையில், ஜோ பைடனுக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார் டுவெயின் ஜான்சன். அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கும், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசுக்கும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். தேர்தல் முடிவுகளும் அவர் எண்ணப்படியே இருந்தது. டொனால்டு ட்ரம்பை வீழ்த்தி அதிபராகியிருந்தார் ஜோ பைடன். இப்படி உலக வல்லாதிக்க நாடான அமெரிக்காவின் அரசியலிலும் டுவெயின் ஜான்சனி பெயர் எதிரொலிக்க செய்தது.

உலகில் 8 முறை WWE World Heavyweight Champion பட்டம் வென்ற ஒரே வீரரான ராக்கின் தனிப்பட்ட திருமண வாழ்க்கை குறித்து பேசாமல் இருக்க முடியாது. ஜான்சன் மல்யுத்த வீரராக கொடிகட்டி பறந்த நேரத்தில் கல்லூரி தோழி டேனி கார்ஷியாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2001ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது, அந்த குழந்தைக்கு சிமோன் அலக்ஸாண்ட்ரா என்று பெயரிட்டனர். மிகவும் சுவாரஸ்யமாகவும் சுமூகமாகவும் திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்த தருணத்தில் தான், இவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. விவாகரத்து குறித்து தெரிவித்த அவர்கள், பிரிவு நட்பு ரீதியானதே என்றும், மீதமுள்ள வாழ்க்கையை சிறந்த நண்பர்களாக கழிக்க விரும்புவதாகவும் கூறினர். இதன் பிறகு ஜான்சன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர் தொடங்கிய “the rock johnson foundations’ அறக்கட்டளை, உலகெங்கும் மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்காக பல்வேறு வகையிலும் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, குழந்தைகளின் கல்வி மேம்பாடு, உடல் பருமன் தடுப்பு உள்ளிட்டவற்றிலும் ஜான்சனின் பங்கு மகத்துவமானது. 2007ம் ஆண்டு ஜான்சனும் அவருடைய முதல் மனைவி டேனி கார்சியாவும் சேர்ந்து 2 மில்லியன் டாலரை மியாமி பல்கலைக்கழகத்துக்கு கொடுத்துள்ளனர். இதனைக் கொண்டு அங்கு கால்பந்தாட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. உச்சபட்ச நட்சத்திரமான ஜான்சன் செய்த உதவிகள் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டன.

சிறுவயது முதலே கடினமாக உழைப்பால் உயர்ந்துள்ள ஜான்சன் என்கிற தி ராக், தன்னை நோக்கி வரும் அத்தனை விமர்சனங்களையும் கடந்தே இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார். கடின உழைப்பு ஒருபோதும் தோற்காது என்பதை தனது வாழ்க்கைப் பயணத்தின் மூலம் ரசிகர்களுக்கு உணர்த்தி வருகிறார் தி ராக் என அழைக்கப்படும் டுவெயின் ஜான்சன்….

 

  • யுவராம் பரமசிவம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஃபெடரல் விளைவு என்றால் என்ன?

G SaravanaKumar

ஒலிம்பிக் தோன்றிய வரலாறு

Vandhana

75 ஆண்டுகளில் இந்தியாவின் இமாலய பொருளாதார வளர்ச்சி

Web Editor