தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 17-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 5-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரை மீது ஜன. 6, 7-ம் தேதிகளில் விவாதம் நடத்தப்பட்டது. பின்னர், 2022-23-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மார்ச் 18-ம் தேதி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், மார்ச் 24-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்பட்டது.
பின்னர் சட்டப்பேரவை விதிப்படி 6 மாதத்திற்குள் அடுத்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதால் இந்த மாதம் இறுதியில் சட்டப்பேரவை கூட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வருகிற 17-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் துணைநிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டப்பேரவை மரபுபடியே அமரவைக்கப்படுவார்கள் என்றும் சபாநாகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்த கூட்டம் எத்தை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தி அதில் முடிவெடுக்கப்படும் என விளக்கமளித்துள்ளார்.
அதேநேரத்தில், இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்ட மசோதா கொண்டுவரப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவு வருகிறது. மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
-இரா.நம்பிராஜன்








