தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.   நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவி வருவதால் மத்திய அரசு தடுப்பு…

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

 

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவி வருவதால் மத்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதேபோல், தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

 

இதனால் மாவட்டம் வாரியாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி தொற்று பரவலை கட்டுப்படுத்து வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் முக்கவசம் அணிய வேண்டும், சமூக பாதுகாப்பினை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

 

இதனால் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் சற்று குறைவாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,03,977 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

நேற்று தொற்று பாதிப்பால் உயிரிழப்பு இல்லை என்றும் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 28 ஆக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல் தொற்று பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 2 ஆயிரத்து 465 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்து 47 ஆயிரத்து 147 ஆக உயர்ந்துள்ளது.

 

அதிகபட்சமாக சென்னையில் 796 பேருக்கும், செங்கல்பட்டில் 410 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.