தமிழ் ஆராய்ச்சிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.134 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்
தாக்கல் செய்துள்ளது.
உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் கனகராஜ் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட கீழமை நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க உத்தரவிட வேண்டும். தமிழ் மொழி மேம்பாடு குறித்து ஆய்வுகள் நடத்த அறிஞர்கள் அடங்கிய நிரந்தர குழுவை அமைக்க வேண்டும். அரபிய எண் முறைக்கு பதில் தமிழ் எண் முறையை அமல்படுத்த வேண்டும். அரசாணைகளை தமிழில் வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய
அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை செயலாளர்
மகேசன் காசிராஜனின் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்
வளர்ச்சிக்காக தமிழக அரசு பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதாகவும்,
தமிழ் ஆண்டு, தமிழ் மாதம் இவற்றை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஆராய்ச்சிக்காக உலக தமிழ் ஆராயச்சி நிறுவனத்தால் 2013ம் ஆண்டு 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், அதன் பிறகும் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்பட்டு
வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி, கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள் நடத்தப்படுவது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது, கீழமை நீதிமன்றங்களில் சாட்சியங்களை தமிழில் பதிவு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது போன்றவற்றையும் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ஆராய்ச்சிக்கென 1971ம் ஆண்டிலேயே தமிழ் மொழி வளர்ச்சி இயக்குனரகம்
அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள், நிதி உதவிகள் வழங்கப்படுவதாகவும், தமிழ் வளர்ச்சித் துறையில் 2019-20ஆம் ஆண்டில் 70 கோடியே 91 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதில் 65 கோடியே 48 லட்ச ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும், 2020-21ம் ஆண்டில் 63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதில் 53 கோடியே 86 லட்ச ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை ஜூலை 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.








