பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வியில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ல் தொடங்கி ஏப்.3-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதேபோல, மார்ச் 14-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வும் இன்றுடன் (ஏப்.5) நிறைவடைந்தது.
இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (ஏப்.6) தொடங்கி ஏப்.20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல்நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த தேர்வை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
இதில் 37,798 தனித்தேர்வர்கள், 13,151 மாற்றுத் திறனாளிகள், 5 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 2,640 சிறை கைதிகள் அடங்குவர். பொதுத்தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 55,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முறைகேடுகளை தடுக்க 4,235 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்டமின்சாதனங்களை கொண்டு வரதடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாகொண்டு எழுதக்கூடாது. விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயரை குறிப்பிடக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றாலோ அல்லது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டாலோ அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடைவிதிக்கப்படும்.







