பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு வரும் 8,9ஆம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்.
அவரின் பயணத்தில் அவர் பங்கேற்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்து தற்போது பார்ப்போம்…
8-ந் தேதி காலை 11.45 மணியளவில் செகந்திரா பாத் ரயில் நிலையத்தை அடையும் பிரதமர் அங்கு செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். பகல் 12.15 மணியளவில் பிரதமர் ஐதராபாத் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கு ஐதராபாத் பிபி நகர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். செகந்திராபாத் ரயில் நிலைய மறுமேம்பாட்டுத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் அவர் ரயில்வே தொடர்பான மேம்பாட்டுத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மாலை 3 மணியளவில் பிரதமர் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கு புதிதாகக் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை அவர் தொடங்கிவைக்கிறார்.
மாலை 4 மணியளவில் பிரதமர், எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சென்னை-கோயம்புத்தூர் வந்தேபாரத் அதிவிரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இதர ரயில்வே திட்டங்களையும் அவர் தொடங்கிவைக்கிறார்.
மாலை 4.45 மணியளவில் பிரதமர், சென்னையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.
மாலை 6.30 மணியளவில் சென்னை அல்ஸ்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
9-ந் தேதி காலை 7.15 மணிக்கு பிரதமர் பந்திப்பூர் புலிகள் சரணாலயம் செல்கிறார். முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் அவர் செல்வார்.
தமிழ்நாட்டில் பிரதமர்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை (முதல்பகுதி) பிரதமர் தொடங்கிவைக்கிறார். இந்தப் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம், விமான நிலையத்தின் பயணிகள் சேவைத் திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயர்த்தும். இந்தப் புதிய முனையம், கோலம், சேலை, கோயில்கள் போன்ற பாரம்பரிய அம்சங்களைக் கொண்ட தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும். இயற்கையான சுற்றுப்புறத்தைக் கொண்டதாக இது அமையும்.
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் சென்னை-கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைப்பார். தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கிவைப்பார். திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையிலான ரயில் சேவையையும் அவர் தொடங்கிவைப்பார். இந்த ரயில்சேவை கோவை, திருவாரூர், நாகப்பட்டிணம் பயணிகளுக்கு பயனளிக்கும்.
திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையே 37 கி.மீ. அகல ரயில்பாதைத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைப்பார். இது ரூ.294 கோடியில் நிறைவடைந்துள்ளது. நாகை மாவட்டம் அகஸ்தியம் பள்ளியில் இருந்து உப்பு ஏற்றிச்செல்ல இது உதவும்.
சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-ம் ஆண்டு கொண்டாட்டத்திலும் பிரதமர் கலந்து கொள்கிறார். 1897-ம் ஆண்டு சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தை சுவாமி ராமகிருஷ்ணானந்தா தொடங்கினார். ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் ஆகியவை மனிதகுலத்துக்கு சமூகசேவை நடவடிக்கைகள் மூலம் பல்வேறு வடிவத்தில் சேவைகளை வழங்கும் ஆன்மிக அமைப்பாக உள்ளது.
சென்னை அல்ஸ்தம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மதுரை நகரில் 7.3 கி.மீ. நீள மேல்மட்டச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 785-ன் 24.4 கி.மீ. நீள 4 வழிச்சாலை ஆகியவற்றை அவர் தொடங்கிவைப்பார். தேசிய நெடுஞ்சாலை 747-ல் சாலைத் திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார். ரூ.2,400 கோடிக்கும் அதிக மதிப்பிலான இந்தத் திட்டம் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே சாலை இணைப்பை மேம்படுத்தும். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், கேரளாவில் உள்ள சபரிமலை ஆகியவற்றுக்கு பக்தர்கள் வசதியாக பயணம் செய்வதை இது உறுதிசெய்யும்.








