முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள் சினிமா விருது Breaking News

ஆஸ்கர் கதவை தட்டிய தமிழ் திரைப்படங்கள் – ஒரு பார்வை


பி.ஜேம்ஸ் லிசா

கட்டுரையாளர்

உலக சினிமாவில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் மிகப்பெரிய விழாவாக நடத்தபட்டு , தகுதியான படங்களை தேர்வு செய்து அதற்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 13 ஆம் தேதியான இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. விழாவில், இந்த முறை எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் ,ஜுனியர் என்டிஆர் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு ‘ பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவின் விருதை தட்டிச் சென்றது. தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட இரு பழங்குடிகளைப் பற்றிய ஆவணப்படமான ”தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்” படம் ஆவணக் குறும்படப் பிரிவில் விருதினை வென்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுவரை ஆஸ்கர் விருதுக்கு தமிழ் சினிமாவில் இருந்து அனுப்பப்பட்ட படங்களின் விவரங்களை தற்போது கீழே காணலாம்.

1. தெய்வ மகன் (1969)

இந்தியாவிலிருந்து பிராந்திய மொழியில் வாங்காள மொழிக்கு அடுத்தபடியாக முதன்முதலில் ஒரு தமிழ் படமாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட படம் தெய்வமகன் மட்டுமே. இந்த படத்தில் சிவாஜி கணேசனின் மூன்று பாத்திரங்களும் 3 வெவ்வேறு வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததோடு, அதை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருப்பார் சிவாஜி. அவரது பல படங்கள் நடிப்பில் பேசப்பட்டாலும், தெய்வமகன் படத்தில் புறக்கணிக்கப்பட்ட மகனாக பாசத்துக்காக ஏங்குவதும், தாய் தந்தை வெறுத்தாலும் அவர்களை நேசிக்கும் மகனாக சிவாஜி கணேசன் உருகி உருகி நடித்து நம்மை கலங்க வைத்திருப்பார். அதற்கு ஏற்றாற்போல் ஆரூர்தாஸ் வசனமும், ஏசி திருலோகச்சந்தரின்
காட்சி அமைப்பும் படத்தில் மிக அற்புதமாக இருக்கும். இத்தனை சிறப்பம்சங்கள் இருந்ததால் தான் ‘தெய்வமகன்’ திரைப்படம் 42-வது ஆஸ்கர் விருதுகள் விழாவில், சிறந்த ‘வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது.

2. நாயகன் (1987)

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் 1987 ஆம் ஆண்டு வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மும்பையில் வாழ்ந்த தாதாவான வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில், நடிகர் கமலஹாசன் தன் அசுர நடிப்பால் மொத்த சினிமா உலகையே பிரமிக்க வைத்து, திரும்பி பார்க்க வைத்திருப்பர். குறிப்பாக, இப்படத்தில் அவர் பேசிய வசனங்களும், வயதிற்கேற்ற உடல் மொழியும் அன்று தொட்டு இன்றுவரை பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல், இசைஞானி இளையராஜா அவர்களின் இசை படத்திற்கு உயிர் கொடுக்க, தோட்டா தரணி கலை இயக்குனராக தனது வேலையை கச்சிதமாக செய்ய, பிசி ஸ்ரீராமின் அழகிய ஒளிப்பதிவில் இத்திரைப்படம் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டது. அன்றைய காலகட்டங்களில் கேங்ஸ்டர் படங்களுக்கு டிரேட் மார்க்கை இந்த படம் செட் செய்ததோடு, அதற்கு பின்னர் வெளியான கேங்ஸ்டர் திரைப்படங்களிலும் இதன் தாக்கத்தை நம்மால் காண முடிந்தது. இத்தனை சிறப்பம்சங்கள் இருந்ததால் தான் ‘நாயகன்’ திரைப்படம் தமிழ் சினிமாவிலிருந்து இரண்டாவது முறையாக 60-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில்
இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது.

3. அஞ்சலி (1990)

மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் தாய் மற்றும் மகளின் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து 1990-ம் ஆண்டு வெளியான படம் ‘அஞ்சலி’. இத்திரைப்படதில் மூளை வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையின் வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருந்த இயக்குனர் மணிரத்னம், அதற்குள் குடும்பம், நட்பு, உறவு, பாசம் என பல விஷயங்களை மிக நேர்த்தியாக கையாண்டு நம்மை கலங்க வைத்திருப்பார். குறிப்பாக, இப்படத்தின் கிளைமாக்ஸ் கட்சியை பார்த்து கலங்காத உள்ளங்களே இருந்திருக்க மாட்டார்கள். இதனால் தான் ‘அஞ்சலி’ திரைப்படம் தமிழ் சினிமாவிலிருந்து மூன்றாவது முறையாக 63-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது. இதன் மூலம், எப்படி ‘நாயகன்’ திரைப்படம் கமலுக்கு உலகநாயகன் அந்தஸ்தை பெற்று தந்ததோ, அதேபோல் நாயகன், அஞ்சலி என அடுத்தடுத்து படங்கள் ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றதால், நாட்டின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறிப்போனார் மணிரத்னம்.

4. தேவர் மகன் (1992)

1992 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் தேவர் மகன். கமல்ஹாசன் கதை மற்றும் திரைக்கதை எழுத, பரதன் இத்திரைப்படத்தை இயக்கினார். சாதியை மையப்படுத்திய கருத்துகள் இருந்ததால், கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றாலும், இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக, சிவாஜி, கமல் என்கிற இரு இமயங்கள் இணைந்து ஒன்றாக நடித்ததுடன், தந்தை மற்றும் மகன் கதாபாத்திரத்தில் இவர்கள் இருவரும் அப்படியே பொருந்திப்போன விதம் பலரால் ரசிக்கப்பட்டது. இவர்களது நடிப்பு ஒரு பக்கம் இருந்ததோடு, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவும் இளையராஜாவின் இசையும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. இதனாலேயே ‘தேவர் மகன் ‘ திரைப்படம் தமிழ் சினிமாவிலிருந்து நான்காவது முறையாக 65-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது.

5. குருதிப்புனல் (1995)

1995ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இயக்குநராக அவதாரம் எடுத்த திரைப்படம் ”குருதிப்புனல்”. இதில்,முதன்முறையாக கமலஹாசனுடன் ஆக்சன் கிங் அர்ஜுன் இணைந்து நிஜமான போலீஸ் அதிகாரிகளை போலவே இருவரும் வளம் வந்திருப்பார்கள். ஒரு இந்தி படத்தை தழுவி ‘கல்ட் கிளாசிக்’ படமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் கமலஹாசனின் ஸ்கிரீன்பிளே ரைட்டிங் ரசிகர்கள் அனைவரையும் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை கட்டிப் போட்டு உட்கார வைத்தது. அதற்கு ஏற்றார் போல் இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இயக்கி இருப்பார். குறிப்பாக, இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எப்பொழுது பார்த்தாலும் நம் இதயத்தை ரணமாக்கி விடும். இதற்காகவே இப்படம் தமிழ் சினிமாவிலிருந்து ஐந்தாவது முறையாக 68-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது.

6. இந்தியன் (1996)

மீண்டும் அடுத்த ஆண்டே கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் ‘இந்தியன்’. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ஒரு சுதந்திர தியாகியின் ஆழமான தேசப்பற்றை மிக அழகாக பதிவு செய்திருந்தது. மேலும் இப்படத்தில் லஞ்சம் வாங்குவதும் தப்பு ,அதேசமயம் லஞ்சம் கொடுப்பதும் தப்பு என இந்தியன் தாத்தாவாக வந்து வசனங்களின் மூலம், நம் அனைவருக்கும் சிறந்த
பாடத்தைப் புகட்டினார் கமல்ஹாசன். இது தவிர ஏ.ஆர் ரகுமானின் இசையும் இப்படத்திற்கு கூடுதல் பலம். ஊழல் குறித்த விழிப்புணர்வை இந்தியா முழுவதும் மிக ஆக்ரோஷமாக இப்படம் கொண்டு சேர்த்தால் தமிழ் சினிமாவிலிருந்து ஆறாவது முறையாக ‘இந்தியன்’ திரைப்படம் 69-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது.

7. ஜீன்ஸ் (1998)

மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான படம் ‘ஜீன்ஸ்’ .இந்தப் படத்தில் நடிகர் பிரசாந்த் இரு வேடங்களில் நடித்திருந்ததோடு, நாசரும் இப்படத்தில் இரட்டை வேடத்தில் அசத்தி இருந்தார். குறிப்பாக இப்படத்தில் உலக அதிசயங்களான 7 இடங்களில் பாடல்கள் உருவாக்கப்பட்டதோடு, ஒரு அழகான காதல் கதையை இயக்குனர் ஷங்கர் உருக்கமாக பதிவு செய்திருந்தார். எப்போதுமே கனமான கதையை கொண்ட திரைப்படம் தான் ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்து, இந்தப் படம் ஒரு விதிவிலக்காக, ஒரு காதல் படமாக, தமிழ் சினிமாவிலிருந்து ஏழாவது முறையாக ‘ஜீன்ஸ்’ திரைப்படம் 71-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது.

8. ஹே ராம் (2000)

2000-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் இப்போது பார்த்தால் கூட நம் அனைவரது புருவங்களை உயரச் செய்யும். பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கானும், கமல்ஹாசனும் தொல்லியல் ஆய்வாளர்களாக இந்தப் படத்தில் நடித்து பல உணர்வுகளை நமக்குள் கடத்தி இருப்பர். குறிப்பாக இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தபோது நடந்த பிரிவினை மற்றும் மதக்கலவரங்களை பற்றி இப்படம் மிக ஆழமாக பேசியிருந்தது. இத்திரைப்படம் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், ஒரு திரைப்படத்தை இப்படியும் எடுக்கலாமா என்று அனைவருக்கும் சினிமா பற்றிய விஷயங்களை இத்திரைப்படம் புரிய வைத்ததோடு, தற்போது வரை ஒரு திரைப்படம் எப்படி இயக்கலாம் என்று யோசிக்கும் இளம் இயக்குநர்களுக்கு பாடமாகவும் இப்படம் இருந்து வருகிறது. இதனாலேயே தமிழ் சினிமாவிலிருந்து எட்டாவது முறையாக ‘ஹேராம்’ திரைப்படம் 73-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது.

9. விசாரணை (2016)

கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவிலிருந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளி வந்த ‘விசாரணை’ திரைப்படம் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. இது கோவை ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த இப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. சிறைக்குள் நடக்கும் மனித உரிமை மீறல் குறித்து ரத்தமும், சதையுமாக கூறிய இப்படம் விமர்சகர்கள் மற்றும் திரையுலகினரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது. இதனாலேயே ‘விசாரணை’ திரைப்படம் 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது.

இத்திரைப்படங்கள் தவிர, இந்திய அரசின் சார்பாக இல்லாமல் அந்தந்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தங்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலும் ஆஸ்கருக்கு பல தமிழ் திரைப்படங்களை அனுப்பி வைத்தனர். அதன்படி வித்யாசமான திரைக்கதையில் உருவான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் 2019ஆம் ஆண்டிலும், நடுத்தர வர்க்கத்தினருக்கு விமானப் பயணத்தை சாத்தியமாக்கிய ‘சூரரைப்போற்று’ திரைப்படம் 2020ஆம் ஆண்டிலும், அரசியலை ஒத்த ஓட்டை வைத்து நகைச்சுவையாக சொல்லிய ‘மண்டேலா’ திரைப்படம் 2021-ம் ஆண்டிலும், ஏழை தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் ஒரு நாள் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட ‘கூழாங்கல்’ திரைப்படம் அதே 2021ஆம் ஆண்டிலும், அதேபோல் ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக போராடும் வழக்கறிஞரின் கதையான ‘ஜெய்பீம்’ திரைப்படமும் 2021ஆம் ஆண்டிலும் ஆஸ்கர் விருதுக்காக அனுப்பப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வரலாறு

EZHILARASAN D

கனிமொழி எம்.பி. இல்லத்தில் மு.க. ஸ்டாலின்: ராஜாத்தி அம்மாளிடம் ஆசி!

Halley Karthik

ரூ.250 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்

EZHILARASAN D