மதுரை அஞ்சல் கோட்டங்களில் முதன்முறையாக தமிழ் மொழி எழுத்துக்கள்
அச்சடிக்கப்பட்ட அஞ்சல் பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதற்கு மதுரை தலைமை அஞ்சலக அதிகாரிக்கு எம்பி சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசு பல்வேறு துறைகளில்
ஹிந்தி மொழியை புகுத்துவதாக தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார். மேலும், ஐஐடி, வங்கித் தேர்வுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு குறித்தும், மாற்றுத் திறனாளிகள் துறை தேர்வில் தமிழ்மொழி புறக்கணிப்பு, வங்கி, தபால் நிலையங்களில் வழங்கப்படும் விண்ணப்பங்களில் தமிழ் மொழி இடம்பெற வேண்டும். தமிழ் மொழியில் தேர்வுகள், தபால் நிலையங்களில் தமிழ் மொழியில் விண்ணப்பம் போன்றவற்றுக்காகவும் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தி வருகிறார். தொடர்ந்து, தமிழ் மொழி குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், மதுரையில் உள்ள 33 அஞ்சல் கோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தபால் பைகளில் முதன்முறையாக தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட பைகள் புழக்கத்திற்கு வந்துள்ளன. இதுகுறித்து எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மதுரை கோட்ட அஞ்சல் பொருள் கூடத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, 33 அஞ்சல் கோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தபால் பைகளில் அலுவல் மொழிகளான ஆங்கிலம், இந்தி மொழிகளே இதுவரை மத்திய அரசுத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சுதந்திரத்துக்குப் பிறகான 75 ஆண்டுகளில் மதுரை அஞ்சலக அதிகாரியின் முயற்சியால் முதன்முறையாக தமிழ் மொழியில் வார்த்தைகள் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட மதுரை தலைமை அஞ்சலக அதிகாரிக்கு வாழ்த்துகள்’ தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், சு.வெங்கடேசனின் இந்த பதிவுக்கு தமிழ் மொழி ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும், மகிழ்ச்சிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
-ம.பவித்ரா








