’ஏரியா சபை’ – தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கு சிபிஐ(எம்) வரவேற்பு

ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபை போன்று நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஏரியா சபை என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கு சிபிஐ(எம்) வரவேற்பு தெரிவித்துள்ளது. சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிகளில்…

ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபை போன்று நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஏரியா சபை என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கு சிபிஐ(எம்) வரவேற்பு தெரிவித்துள்ளது.

சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவது போன்று நகர்ப்புற உள்ளாட்சி வார்டுகளிலும் ஏரியா சபை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தி வந்ததாகத் தெரிவித்துள்ள அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆட்சிப் பொறுப்பிலிருந்த மேற்கு வங்கம், திரிபுராவில் வார்டு சபைகள் இயங்கி வந்ததாகவும், தற்போதுள்ள கேரள இடது ஜனநாயக முன்னணி அரசிலும் இத்தகைய வார்டு சபைகள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் கட்சியின் 23வது மாநில மாநாடு மார்ச் 30, 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்ற போது, அது குறித்து தீர்மானத்தை நிறைவேற்றி மாநில அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றதாகத் தெரிவித்துள்ள அவர், தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் ஏரியா சபை அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு வரவேற்கிறது, பாராட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் கதை’

மக்கள் கருத்துக்களை அறிந்து உள்ளாட்சி அமைப்புகளைச் செயல்படுத்த இந்த ஏரியா சபைகள் அதிகாரம் கொண்டதாகச் சிறப்பாகச் செயல்படும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ள அவர், ஆண்டுக்கு 6 சதவிகிதம் சொத்து வரி உயர்வைக் கைவிட வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், தற்போது தமிழ்நாடு அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தி உள்ளது. இதனால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தலையில் பல மடங்கு சுமையை ஏற்றுவதுபோல் ஆண்டிற்கு ஆறு சதவிகிதம் வரி உயர்த்தப்படும் என்பது இன்னும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இந்த வரி உயர்வினை மறு பரிசீலனை செய்வதோடு, ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வு என்பதை முற்றிலுமாக கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.