தமிழ் திரைப்பட விருதுகள் விழாவிற்கு நடிகர் விக்ரம் பட்டு வேட்டி சட்டை அணிந்து வருகை தந்தார்.
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை 5.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதில் 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை உள்ள திரைப்படங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டது.
சிறந்த நடிகர்களாக 2009 – கரண் (மலையன்), 2010 – விக்ரம் (ராவணன்), 2011 – விமல் (வாகை சூடவா), 2012 – ஜீவா (நீ தானே என் பொன் வசந்தம்), 2013 – ஆர்யா (ராஜா ராணி), 2014 – சித்தார்த் (காவிய தலைவன்) ஆகியோர் விருது பெற்றுள்ளனர்.
சிறந்த இயக்குநர்களாக 2009 – வசந்தபாலன் (அங்காடி தேர்வு), 2010 – பிரபு சாலமன் (மைனா), 2011 -ஏ.எல்.விஜய் (தெய்வ திருமகள்), 2012- பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9), 2013 -ராம் (தங்கமீன்கள்), 2014 -ராகவன் (மஞ்சப்பை) ஆகியோர் விருது பெற்றுள்ளனர். இதேபோல் சிறந்த இசையமைப்பாளர்கள், சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகை உள்பட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
2010ம் ஆண்டில் வெளியான ராவணன் திரைப்படத்திற்காக நடிகர் விக்ரமிற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விக்ரம் வேட்டி சட்டை அணிந்து வந்திருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தமிழ் திரைப்பட விருதுகள் பெற்ற திரை நட்சத்திரங்கள் பேட்டி
நடிகர் விக்ரம் பிரபு கூறுகையில், தமிழ்நாடு திரைப்பட விருதுகள் விழா பல ஆண்டுகளாக நடக்கவில்லை என்றாலும் தற்போது நடக்ககிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் நடித்த முதல் படமான கும்கிக்கு சிறந்த நடிகர் விருது பெறுவதில் மகிழ்ச்சியை விட பெருமையும் கூட.கும்கி படக்குழுவினருக்கும், விருது கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும் நன்றி என்று கூறினார்.
நடிகர் பிரசன்னா, 10 ஆண்டுகளுக்கு மேலே நடைபெறாமல் இருந்த விருதுகள் வழங்கும் விழா தற்போது நடைபெறுவது மகிழ்ச்சி. 2009 இல் நான் நடித்த பொக்கிஷம் திரைப்படத்திற்கு சிறந்த நடிகர் விருது வழங்கிய அரசுக்கு நன்றி. பான் இந்தியா படங்களில் தமிழ் சினிமாக்கள் முன்னணியில் தான் உள்ளன. பல ஆண்டுகளாகவே தமிழ் சினிமாக்கள் பல ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு தான் வருகின்றன.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், 2015ல் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படத்திற்காக விருது பெற உள்ளேன். காக்கா முட்டை தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த படம். காக்கா முட்டை படத்திற்கு இதுவரை 5 தேசிய விருதுகள் பெற்றிருந்தாலும் தமிழ்நாடு அரசின் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.







